சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

🕔 February 4, 2020

லங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் 100 பேர் இணைந்து, சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடினார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர், “சுதந்திர தின தேசிய நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என, பொது நிர்வாகத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது.

ஆயினும், சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதில்லை எனும் முடிவினை தாம் எடுக்கவில்லை என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே சுதந்திர தினைத்தைக் கொண்டாடும் இன்றைய தேசிய நிகழ்வில், சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறான தேசிய நிகழ்வுகளின் போது, தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து தமிழ் பேசும் அரசியல் தலைவர்களுடன் பிபிசி தமிழ் உரையாடியபோது, அவர்கள் தமது அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை: மனோ கணேசன்

முன்னள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இது குறித்து கருத்து வெளியிடுகையில்; “வரலாற்றிலிருந்து இலங்கை இன்னும் பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, இந்தப் புறக்கணிப்பு வெளிப்படுத்துகிறது” என்றார்.

“இந்த நாட்டின் சிறப்பே – இதன் பல்லினத் தன்மை, பல் மொழித்தன்மை, பல் மதத்தன்மை போன்றவையாகும்.

ஒரே நாடு – மூன்று மொழிகள், ஒரே நாடு – நான்கு மதங்கள், ஒரே நாடு – பல இனங்கள் என இருப்பதுதான் இலங்கையின் அடையாளமாக இருக்கிறது.

இதற்குள்ளே சிங்கள மொழி பேசுகிறவர்களும், பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், 75 எனும் எண்ணிக்கை 100 ஆக முடியாது. இங்குள்ள எல்லா இனங்களும், மதங்களும் ஒன்றுசேரும் போதுதான் – அது இலங்கையாக முடியும்.

அதைத்தான் 70 வருட இருண்ட வரலாறு கற்றுத் தந்ததாக நான் நினைக்கின்றேன். ஆனால், வரலாற்றில் இழைக்கப்பட்ட பிழையை உணராத நிலையில் இந்த அரசாங்கம் உள்ளது.

1950களில் ‘சிங்களம் மட்டும் சட்டம்’ கொண்டுவரப்பட்டமைக்கான நஷ்டஈட்டை, 70 வருடங்களாக நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த அரசாங்கம் அந்த இருண்ட நிலைக்கு எம்மை அழைத்துச் சென்றுள்ளது.

வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த அரசாங்க காலத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை நாம் பாட ஆரம்பித்தோம். அந்த கீதம் என்பது வெறும் பாடல் அல்ல, இந்த நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களின் – ‘இலங்கையர்’ எனும் அடையாளமாகும்.

தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட தேசியக் கீதம் என்பது கடவுள் தந்த கொடை என்று நினைக்கிறேன். அதன் மூலம் தமிழ் பேசும் மக்களை இலங்கையராக உணரச் செய்தோம். அதை இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது. தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் அமைச்சராக முன்னின்று உழைத்த ஒருவன் என்கிற வகையிலும், இலங்கையன் எனும் வகையிலும், இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் – வேதனைப்படுகிறேன்.

மீண்டும் இருண்ட காலம் திரும்பி விட்டதா என, பலமாகச் சந்தேகிக்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த முட்டாள்தனமான செய்கையினால், சிங்கள – பௌத்தர் அல்லாத மக்கள், ‘நாங்கள் இலங்கையர்களா’ என்று யோசிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்.

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடச் செய்யுமாறு, நேற்றும் கூட, ஜனாதிபதியிடம் மிகவும் நாகரீகமாக கோரிக்கை விடுத்திருந்தேன். அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன். இதை நினைத்து வெட்கப்படுகிறேன் – வேதனைப்படுகிறேன்” என்றார் மனோ கணேசன்.

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை: சிவசக்தி ஆனந்தன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையில்;

“தேசிய கீதம் தமிழில் பாடப்படத்தான் வேண்டும். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்து 72 வருடங்களாயிற்று. ஆனால் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.

72 வருடங்களாக சுதந்திரம் கிடைக்காத எங்களுக்கு, தமிழில் தேசியக் கீதம் பாடுவதால் மட்டும் சுதந்திரம் கிடைத்து விடாது. மேலும், தமிழில் பாடுவதால் சுதந்திர தினத்தை நாங்கள் விரும்பிக் கொண்டாடுகிறோம் என்றும் ஆகிவிடாது.

தேசியக் கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையே. சுதந்திரம் கிடைக்காத எமக்கு, தேசியக் கீதத்தை தமிழில் பாடினால் என்ன? சிங்களத்தில் பாடினால் என்ன?

அல்லது தமிழில் தேசியக் கீதத்தைப் பாடினால் மட்டும், எங்களுக்கான சுதந்திரம் கிடைத்து விடுமா?

எமக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனவாதத்தைப் பரப்பி தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, தமிழ் மொழியை தவிர்க்கும் இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர். அதேபோன்று, தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயம் தீனி போட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பு, அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லாவற்றையும் கோட்டை விட்ட நிலையில், இப்போது தமிழில் தேசியக் கீதம் பாடவில்லை என்பதை ஒரு பிரச்சினையாக உயர்த்திப் பிடிக்கின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகள் – சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, இப்போது தமிழ் மக்களுக்கு இது மட்டும்தான் பிரச்சினை என்பது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

உணர்ந்து பாட வேண்டும்: மன்சூர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், இது குறித்து பேசுகையில்; “தேசியக் கீதத்தைப் பாடுகிறவர்கள், அதன் கருத்தை விளங்கிப் பாடும் போதுதான் ஓர் உயிரோட்டம் இருக்கும்” இருக்கும் என்றார்.

எனவே தமிழ் பேசும் மக்கள் – அவர்களின் மொழியில் தேசியக் கீதத்தை பாடுவதில் எந்தவிதக் குற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“தமிழில் தேசியக் கீதம் பாடக் கூடாது என்று அரசாங்கம் தடைபோடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே போன்று தமிழில் பாடவேண்டும் என்று போராடுவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.

ஏனென்றால் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. எனவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற விடயத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு அப்பால், நாம் பேச வேண்டிய, போராட வேண்டிய, பெற வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

எனவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை பெரிதாகத் தூக்கிப் பிடிக்காமல் தவிர்ப்பது நல்லது என்பதே எனது அபிப்பிராயமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்