தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்

🕔 December 24, 2019

– அஹமட் –

ன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, சுவாசப் பிரச்சினையுள்ள சிறுவன் ஒருவருக்கு – சிற்றூழியர் ஒருவர் சிகிச்சையளிக்க முயற்சித்தமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றது.

சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட தனது மகனை தந்தையொருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று இரவு 09.30 மணியளவில் அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த நபர் ஒருவர் தன்னை தாதி உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறுவனுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மருந்து கலக்க ஆரம்பித்துள்ளார். இதன்போது அவரில் சந்தேகம் கொண்ட தந்தை, அவரிடம் மீண்டும் மீண்டும் விசாரித்த போது, குறித்த நபர் அங்கு கடமையாற்றும் சிற்றூழியர் என தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த சிற்றூழியரிடம் இவ்வாறு நடந்து கொண்டமையானது மிகப் பெரும் பிழை என்பதை மேற்படி தந்தை சுட்டிக்காட்டிய போது, அந்த சிற்றூழியர் கதிரையைத் தூக்கி தாக்குவதற்கு முயச்சித்துள்ளார்.

இச்சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வைத்தியர் முன்னிலையிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிற்றூழியர் ஒருவர் – தன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, நோயாளி ஒருவருக்கு மருந்து கொடுக்க முயற்சித்தமை பெரும் குற்றம் என்பதோடு, அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதொரு செயற்பாடாமாகும்.

குறித்த சிற்றூழியர் ஊசியில் மருந்து கலந்த போது, மேற்படி தந்தை தனது கைத் தொலைபேசியில் அதனை படம் பிடித்துக் கொண்டார்.

இந்த சிற்றூழியர் வைத்தியசாலைக்கு வருகை தந்த மற்றொரு பொதுமகனுடனும் மோசமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி சிற்றூழியர் போதையில் இருந்தாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்விடயம் குறித்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி, கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியமை அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்