கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

🕔 December 10, 2019
ஏ.ஆர். இஸ்மாயில்

– அஹமட் –

ம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு செய்யப்பட்ட 31 வறிய குடும்பங்களின் வீடுகளுக்கு நிரந்தர கூரைகளை நிர்மாணிக்கும் பொருட்டு, தலா 01 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஊடாக வழங்கப்பட்ட இந்த நிதியினை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு பகிர்ந்தளித்தது.

அந்த வகையில் அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வசித்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவரும் இந்த உதவித் திட்டத்தில் சேர்க்கப்பட்டதோடு, அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, ஒரு பகுதி நிதியாக 60 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கியது.

காசோலை இஸ்மாயிலின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டமைக்கான சீட்டு

மேற்படி இஸ்மாயில் என்பவர் வசித்த வீடு அவருக்குச் சொந்தமானது அல்ல என்பதால், அங்கிருந்து அவர் வெளியேற வேண்டிய நிலைவரமொன்று ஏற்பட்டது. அதனால், அவர் அட்டாளைச்சேனையிலுள்ள முல்லைத்தீவு கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார்.

இதனையடுத்து, இஸ்மாயில் என்பவருக்கு தாம் வழங்கிய 60 ஆயிரம் ரூபா பணத்தை, திரும்பவும் வழங்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பிரிவினர் வற்புறுத்தியுள்ளனர்.

எனவே, தனது கணவர் செலுத்த வேண்டிய பணத்தை அவரின் மனைவி அப்துல் ஹசன் பாத்தும்மா என்பவர் செலுத்துவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு ஒக்டோபர் 02ஆம் திகதி சென்றுள்ளார். (ஆனாலும், அந்தத் திகதியை சரியாக நினைவுபடுத்திக் கூற முடியாமல் அவர் அடிக்கடி தடுமாறுகின்றார்).

“அப்போது என்னிடம் 50 ஆயிரம் ரூபாய்தான் பணம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு பிரதேச செயலகத்துக்கு சென்று, அங்குள்ள ஏ.டி.பி. (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்) அஸ்லம் என்பவரைச் சந்தித்து, அவரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன்”.

“மிகுதி 10 ஆயிரம் ரூபாவையும் மறுநாள் (ஒக்டோபர் 03ஆம் திகதி) பிரதேச செயலகத்துக்கு எடுத்துச் சென்று, அஸ்லம் என்பவரிடம் ஒப்படைத்தேன். நான் பணம் கொடுக்காமல் விட்டால், எனது கணவரை பொலிஸில் பிடித்துக் கொடுப்பதாக அஸ்லம் என்பவர் என்னிடம் கூறினார். அதனால், எனது காதணியை ஈடு வைத்து, அதில் கிடைத்த பணத்தைத்தான் அவரிடம் கொடுத்தேன்” என்கிறார் இஸ்மாயிலின் மனைவி பாத்தும்மா.

மேற்படி 60 ஆயிரம் ரூபா பணத்தையும் இஸ்மாயில் சார்பாக அவரின் மனைவியிடமிருந்து, உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் பெற்றுக் கொண்ட போதும், அந்தப் பணம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வங்கிக் கணக்கில் இன்றுவரை வைப்பிலிடப்படவுமில்லை, பிரதேச செயலக கணக்காளரிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்படவுமில்லை.

அப்படியென்றால் அந்தப் பணம் எங்கே?

உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் அந்தப் பணத்தை சுருட்டிக் கொண்டார் என்கிற தகவல் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், இந்த நிதி மோசடி குறித்து முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு இஸ்மாயில் மற்றும் அவரின் மனைவி பாத்தும்மா ஆகியோரைச் சந்தித்த ‘புதிது’ செய்தித்தள குழுவினர், அவர்களிடம் நடந்த விடயத்தை வாக்கு மூலமாக வீடியோ வடிவில் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பற்றிய முன்னோட்டச் செய்தியொன்றினையும் நேற்றிரவு ‘புதிது’ வெளியிட்டது.

இதனையடுத்து, இந்த விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள், இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் சென்று, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லமிடம் விசாரணை நடத்தியுள்ளதோடு, அவரிடமிருந்து சில ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

அரச பணத்தை 02 மாதங்களுக்கும் மேலாக தன்வசம் வைத்திருந்ததோடு, அதை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியமையானது பாரதூரமான குற்றமாகும்.

உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம், பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைப் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலேயே, தற்போது இவ்வாறானதொரு சிக்கலில் மாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் மனைவி பாத்தும்மா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்