ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்
– அஹமட் –
சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா 01 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வேறொருவரின் வீட்டில் வசித்து வந்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கும் அந்த உதவித் திட்டத்தின் கீழ், முற்பணமாக 60 ஆயிரம் ரூபா இவ்வருடம் செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவினால், இந்த விடயம் கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏ.ஆர். இஸ்மாயில் என்பவர் அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவிலிருந்து, அட்டாளைச்சேனை – முல்லைத்தீவு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்.
இதன்காரணமாக, வீடு புனர்நிர்மாணத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவினையும், திருப்பித் தருமாறு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவினர் அவரை வற்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஏ.ஆர். இஸ்மாயில் என்பவரின் மனைவியான பாத்தும்மா என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சென்று, அங்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் அஸ்லம் என்பவரிடம், தமக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணத்தையும் – தான் கையளித்ததாகக் கூறுகின்றார்.
ஆனாலும், அவ்வாறு பாத்துமா என்பவரிடமிருந்து பெறப்பட்ட பணம் சுமார் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்கில் இடப்படவுமில்லை, பிரதேச செயலகத்தின் கணக்காளரிடமும் ஒப்படைக்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் புலனாய்வு செய்ததில் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அந்த மோடிகள் தொடர்பிலான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களுடன், முழுமையான செய்தி, நாளை செய்வாய்கிழமை இரவு ‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியாகும்.
காத்திருங்கள்.