வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 December 6, 2019

னாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, டிசெம்பர் 2ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதொன்றென எடுத்துரைத்தனர்.

குறித்த ஊடகவியாளர் சந்திப்பின்போது, வெள்ளை வேன் சாரதி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவரால் கூறப்பட்ட கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், காணாமல் போதல், கடத்தல், திருட்டு, தகவல் திருட்டு, சந்தேகநபர்களின் தங்குமிடம் போன்ற விடயங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு, அந்த ஊடக சந்திப்பு குறித்துப் பதிவு செய்யப்பட்ட முழுமையான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அக்காட்சிகளை பரிசோதித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த புலனாய்வுப் பிரிவினர், அக்காட்சிகளின் தொகுப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினர்.

வழக்கை ஆராய்ந்த பிரதான நீதவான், குறித்த ஊடக சந்திப்பு தொடர்பான காட்சிகளைத் தொகுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்தோடு, இந்த வழக்கை, ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Comments