இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

🕔 December 3, 2019

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால், புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடை செய்ய முடியாதுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். 

இச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

குறித்த விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்திய அதன் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். 

இதன் போது , தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என்றும் இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். 

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கையில், 

தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் இதுவேயாகும்.  

நான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியபோது தேசிய பாதுகாப்பு சபை தினமும் ஒன்று கூடியது. புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடினேன். 

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் தகவல்கள் கிடைத்த மறுகணமே தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்து அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 விரிவுரையாளர்கள் இவ்வாறே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது.  

தாக்குதல் தொடர்பான சகல தகவல்களையும் கண்டறிவதுடன், இத்தகைய தாக்குதல்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும். 

அத்தோடு பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இதற்காக ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்