புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு

🕔 December 1, 2019

– முன்ஸிப் –

சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு க்ரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கான அறிவினை ஊடகவியலாளர்களுக்கு விருத்தி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிப் பட்டறையில், சிரேஸ்ட ஊடகவியலாளர்களான சி. தொடாவத்த, தாஹா முஸம்மில், ஆனந்த ஜயசகர மற்றும் அமீர் ஹுசைன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகப் புலனாய்வின் போது – தகவலறியும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு உச்ச அளவில் பயன்படுத்துவது என்பது குறித்தும், அதன் போது கையாள வேண்டிய நுட்பங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டோர் தமது பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகளை வெளிப்படுத்தும் வகையில் புலனாய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் இதன்போது ஊக்குவித்ததோடு, அதற்கான நிதியினை ஊடகவியலாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 ஊடகவியலாளர்களுக்கு மட்டும், இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்