ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும், ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நடவடிக்கையில் பாரிய மோசடியொன்று மேற்கொள்ளப்படுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாக அறியக் கிடைக்கிறது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாவினையும், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் பொருட்டு 75 லட்சம் ரூபாவையும், முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் கடந்த அரசாங்கத்தில் ஒதுக்கியிருந்தார்.
மேற்படி 25 லட்சம் ரூபா நிதியில் ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக – தையல் இயந்திரங்களை வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, அவற்றினைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், தையல் இயந்திரங்களுக்குரிய உண்மை விலையை விடவும், மிக அதிக விலையில் அவற்றினைக் கொள்வனவு செய்வதாக கணக்குக் காட்டி, பல லட்சம் ரூபாவை சுருட்டிக் கொள்ளும் முயற்சியில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் அதிகாரியொருவர் முயற்சித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது.
‘கணக்கு வழக்குடன்’ தொடர்புபட்ட அதிகாரியொருவரே இந்த மோசடியை மேற்கொள்ளும் செயற்பாட்டில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த அதிகாரியின் பல்வேறுபட்ட ஊழல், மோசடிகளை ‘புதிது’ செய்தித்தளம் கடந்த காலத்திலும் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலும், பல லட்சம் ரூபாவை சுருட்டிக் கொள்ளும் முயற்சியில் ‘கணக்கு வழக்கு’ அதிகாரி ஈடுபட்டுள்ளதாக பிரதேச செயலகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் விரிவான தகவல்களையும் ஆதாரங்களையும் எதிர்வரும் நாட்களில் வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம்.
தொடர்பான செய்திகள்:
01) பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம்