சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

🕔 November 28, 2019

லங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை கடந்த 25ஆம் திகதி வலுக்கட்டாயமாக அடையாளம் தெரியாத சிலர் தடுத்து வைத்து, சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சுவிட்சர்லாந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை முக்கிய விடயமாக தாம் கருத்திற்கொள்ளுவதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிடுகிறது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு அதிகாரி நிஷாந்த சில்வா பொலிஸாரிடம் தெரிவிக்காமல் கடந்த 24ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற மறுதினம் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்