ஊடக விவாதத்தில் பயன்படுத்திய தவறான வார்த்தைக்காக மன்னிப்புக் கோரிய பிரபலம்: குவிகிறது பாராட்டு
ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் தவறான வார்த்தையைச் பயன்படுத்தியமைக்காக மலையாள நடிகை பார்வதி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளமை, பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் இந்தியாவின் முக்கிய நடிகர்கள் கலந்துகொண்ட விவாத சினிமா நிகழ்வு ஒன்றில் கலந்துரையாடினார்.
அந்த நிகழ்வில் ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் திரைப்படம் பெண்களுக்கு எதிரான பாலின வெறுப்புக் காட்சிகளைக் காட்டுவது தவறு எனக் கூறினார். அத்திரைப்பட நாயகன் விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே நடிகை பார்வதி இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தமை பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.
இதுகுறித்த விளக்கத்தின் போது ‘அர்ஜுன் ரெட்டி’மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய திரைப்படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் நடிகை பார்வதி புரிய வைத்தார். அதன்போது, ‘பைபோலார் குறைபாடு’ என்னும் வார்த்தையை பார்வதி பயன்படுத்தினார்.
‘பைபோலார் குறைபாடு (Bipolar disorder) என்பது ஒரு வகையான மனநலம் சார்ந்த பாதிப்பாகும்.
இந்த வார்த்தையை நடிகை பார்வதி பயன்படுத்தியமை காரணமாக இந்த பாதிப்பு உள்ளோர் அவமானப்படுத்தப்படலாம் என்று, ட்விட்டர் பதிவில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த பார்வதி; “நான் செய்தது மிகப்பெரிய தவறு. என் வார்த்தைப் பிரயோகத்தை கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும். இதை என் கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக மிகவும் நன்றி. கற்றுக்கொள்கிறேன். தவறானதை மறந்து புதிதாகக் கற்கலாம்” என பதிலளித்துள்ளார்.