ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவதானம் செலுத்தியுள்ளார்.
அதன்படி, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட் தொடர்பில் தீவிர அவதானத்துடன் இருப்பதாகவும், விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவரை வௌிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இடமளிக்க வேண்டாம் எனவும் குறித்த பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இவரால் மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணை குழு ஒன்றை நியமிக்குமாறு தான் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடி உள்ளிட்ட நிதி முறைகேடு தொடர்பில் தகவல் அறிந்த நபர்கள் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் அல்லது அமைச்சின் ஊடாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ள விசேட விசாரணை குழுவிற்கு எழுத்து மூலம் அல்லது வாய்மூலமாக உடனடியாக அறிவிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.