தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

🕔 November 25, 2019

– அஹமட் –

க்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மின்னல்’ நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறியமை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மிகக் கேவலமானதொரு விடயமாகும்.

ஊடகத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்கிற விவஷ்தைகளற்று, பல தடவை அதாஉல்லா மிகவும் மோசமாக நடந்துள்ளதாக, அவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

தனது ஊரில் ஏதோவொரு நாலாந் தெருவில் பத்து – இருபது பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு நடத்தும் அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்கு ஒப்பாக, தேசிய ஊடகங்களில் இடம்பெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளிலும் பேசலாம் என்று அதாஉல்லா எண்ணிக் கொண்டிருப்பதை, அவர் திருத்தியே ஆக வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறும் அதாஉல்லா; அவர் சார்ந்த சமூகத்தவர்களை, மற்றவர்கள் கேவலமாகப் பேசுவதையோ, எழுதுவதையோ எந்த முகத்தை வைத்துக் கொண்டு கண்டிப்பார் என்று தெரியவில்லை.

‘முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதி’ எனும் அடையாளத்துடன், ஊடகங்கள் முன் தோன்றி பேசும் போது, நீங்கள் விடுகின்ற ஒவ்வொரு தவறும், உங்கள் சமூகத்தை இணைத்தே மற்றைய சமூகத்தவர்களால் பெரும்பாலும் பார்க்கப்படும் என்பதை, அதாஉல்லா உணர்ந்து கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்கள் குறித்து தான் கூறியதை நியாயப்படுத்த முயற்சிக்காமல், தனது தவறுக்காக அந்த மக்களிடம் மனம் வருந்தி அதாஉல்லா மன்னிப்புக் கேட்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு நடப்பதுதான் மனிதப் பண்பாகவும், அதாஉல்லாவை தலைவராக நேசிப்பவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும்.

செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.

தொடர்பான செய்தி: அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்