தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் ரகசியமான வகையில் கள்ள உறவு வைத்துக் கொண்டதாக, அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளித்து செயற்பட்டது.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்கள் மற்றும் தேர்தலின் போது நடந்த முக்கியமான சில விடயங்களை, மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவிலேயே மேலுள்ள குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
இவ்வாறு மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை, ‘வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் ரவி கருணாநாயக்க போன்றோர், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பயணத்தில் இலகு பரப்பை (Soft Zone) ) தேடி, தமிழ் – முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றார்கள்.
இவர்கள் சொல்லி தமிழ் – முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை.
உண்மையில் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அறிவிப்பதற்கு முன்னரே தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தயாராகி விட்டார்கள். இதுதான் உண்மை நிலைவரமாகும்.
‘உங்களுக்கு உசிதமான சிங்கள பிரதேசங்களுக்கு சென்று, சிங்கள வாக்கை தேடுங்கள்’ என, பலமுறை அவர்களுக்கு தகவல் அனுப்பினேன். எவரும் கேட்கவில்லை.
இந்த அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான் உண்மையான காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாது’ என்றும் மனோ கணேசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை சஜித் தரப்பு மதிக்கவில்லை என்று பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தனது பதிவில் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ கணேசன்; ‘ரணிலை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரிய விஷயம் அல்ல. ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது.
ஆனால் நின்று, நிதானித்து, சிந்திக்க கூட நேரம் இல்லாத தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கை தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது’ என்று தெரிவித்துள்ளதோடு, இதற்கு யார் பொறுப்பு? என்கிற கேள்வியினையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும் தேர்தலுக்கான நிதி சஜித் அணியிடம் இருக்கவில்லை என்றும், தேர்தலுக்கான நிதி இல்லாமலேயே சஜித் தரப்பு களத்தில் குதித்து விட்டதாகவும், தனது பேஸ்புக் பதிவில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.