ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி
ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு அவசியம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;
இந்த தேர்தலில் மட்டுமலாமல் இதற்கு முன் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் பலவற்றிலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, சரத்பொன்சேகா, மைத்ரிபால சிரிசேன போன்ற வேட்பாளர்களுக்கே சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆகவே இந்த தேர்தலில் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததை, இனவாதம் கொண்டு நோக்கக் கூடாது. அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் சிங்கள பௌத்தரான சஜித் பிரமதாசவுக்கே வாகளித்துள்ளர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த தேர்தல் முடிவானது சிறுபான்மையினருக்கு குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு சிறந்த செய்தி ஒன்றை கூறியுள்ளது.
பெரும்பான்மை மக்களிடத்தில் எவ்வாறு இனவாத பிரச்சாரங்கள் களையப்பட வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோமோ, அதே போல் எமது மத்தியிலும் அது நிகழ வேண்டும். இதை அடிப்படையாக கொண்டு சிறுபான்மை கட்சிகள் தமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த தோல்வியானது எமக்கு சிறந்த படிப்பினையை தந்துள்ளது. இதை சிறந்த பாடமாக எடுத்து நாம் முன்னோக்கிச் செல்வோம். இது எமக்கு கிடைத்த சிறிய பின்னடைவே ஆகும். எமது ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு விரைவில் முன்னோக்கி வருவோம்.
அதற்கு முதலில் கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு அதற்காக நாம் போராடுவோம்” என்றார்.