பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
ரணில் உரை
இந்த நிலையில் பதவி விலகியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
இதன்போது; கடந்த ஐந்து வருடங்களாக ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்துகளை வெளியிடக் கூடிய தகவல் அறியும் உரிமை மற்றும் அனைவரையும் சமமாக மதிக்கும், நல்லிணக்கத்தை உருவாக்க தான் நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து திணைக்களங்களையும் அரசியலில் இருந்து விடுவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், நியாயமாகவும் நடைபெற்றமை அதன் ஒரு பிரதிபலனாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாங்கள் ஆற்றிய அந்தப் பணிகளுக்கான சரியான தீர்மானத்தை எதிர்காலமே பெற்றுக்கொடுக்கும் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் தொடர்பில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கின்ற போதிலும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை கருத்திற் கொண்டு, அவர்களின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தாம் பதவி விலகத் தீர்மானித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.