முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை

🕔 November 19, 2019

– தாவூத் நஸீர் –

முஸ்லிம் அரசியல் தலமைகள் – புதிய அரசாங்கத்தில் பதவிகளைப் பெற முயற்சிப்பது, சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வலைகளை மேலும் ஆழமாக்கி வன்முறைகளுக்கு இட்டுச் செல்லும்.

உங்களது பதவி ஆசைகளை துறந்து, கோட்டாபயவுக்கு வாக்களித்த 70 லட்சம் சிங்கள மக்களிடம் – முஸ்லிம் மக்கள் உறவை மேம்படுத்த வழி விட வேண்டும் என்று தயவு செய்து வேண்டுகிறோம்.

கால காலமாக மஹிந்தவை தேர்தலில் எதிர்ப்பதும் சமூகத்துக்காவே இணைகிறோம் என்று பொய்களையும் கட்டுக்கதைகளையும் கூறி எதிர்த்தவர்களிடம் போய் சரணடைவதும், சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் சம்பந்தமான நல்அபிப்பிராயத்தை பிரளச் செய்கிறது.

அதுவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாக உருப்பெறுகிறது என்ற கள யதார்த்தத்தை புரிந்து, முஸ்லிம் கட்சி அரசியல் தலமைகள் செயல்படுவது இக்கால கட்டத்தில் மிக முக்கியமானது.

நீங்கள் அரசாங்கத்தில் பங்காளியாக வேண்டுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுடன் கூட்டணியமைத்து வென்ற பின் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்று சுகபோகங்களை அனுபவிக்கவும்.

தனிப்பட்ட குடும்ப, கோடினேட்டர், கொந்துராத்து அரசியலுக்கப்பால் நின்று, கள நிலவர அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம், சிங்கள, தமிழர் சமூக இன மேம்பாட்டுக்கு வித்திடும் அரசியல் கலாச்சாரத்துக்கான மாற்று அரசியல் சிந்தனையுடன், சஜித் பிரேமதாஸவுடனும் அவருக்கு வாக்களித்த 40 லட்சத்துக்கும் மேலான சிங்கள மக்களுடனும் இணைந்தும் செயல்பட வேண்டும்.

தற்போது அரசாங்கத்தில் நீங்கள் இணைவதற்காக விடும் தூதுகள், பதவிகளை பெற எடுக்கும் முயற்சிகள், சஜித் பிரேதாஸவுக்கு ஆணை வழங்கிய 40 லட்சத்துக்கு மேலான சிங்கள மக்களையும் முஸ்லிமக்களுக்கக்கு எதிரான வன்முறைகளை நிகழ்த்த தூண்டக் கூடும்.

எனவே எதிர்க்கட்சி அரசியலில் இருந்துகொண்டு,முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்