சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு
– அஹமட் –
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், அவரின் அரசியலில் தோற்றுப் போய் விட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்று, தேர்தல் காலத்தில் நிந்தவூரில் வைத்து ரஊப் ஹக்கீம் கூறியிருந்தார்.
அப்படியென்றால், சஜித் பிரேமதாஸவின் தோல்வியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் தோல்வியாகவே இருக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் பதவி ஏற்ற பின்னர், அவர் ஆதரித்த எந்தவொரு நபரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை.
கடந்த தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவை ஹக்கீம் ஆதரிக்கவில்லை. மக்கள் ஆதரித்து விட்டார்கள் என்பதற்காக தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றதன் பின்னர்தான், அவர் ஓடி வந்து மைத்திரியின் பக்கமாக ஒட்டிக் கொண்டார்.
முஸ்லிம் மக்களை எப்போதும் ரஊப் ஹக்கீம் தனது சுயநலத்துக்காக, பிழையாகவே வழிநடத்தி வந்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபாய ராஜபக்ஷவுடன் எமது கட்சியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுத்து மூல ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துள்ளது.
இதன் மூலம் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து, முஸ்லிம் சமூகத்தின் நலன் தொடர்பில் எமது கட்சி எதிர்காலத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்” என்றார்.