நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு

🕔 October 21, 2015
Ravi karunanayaka - 012
நி
தியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஹன்சாட்டில் நிதியமைச்சரின் பெயர்  ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றுதான் பதியப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்த கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்விடயத்தினைக் கூறியதும், சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறியதோடு, பந்துல குணவர்தனவுடன் முரண்பட்டுக் கொண்டார்.
இதேவேளை, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பந்துல குணவர்தனவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்த நிலையில்,உறுப்பினரின் பெயரை மாத்திரமே பிரஸ்தாபிக்குமாறும், அவர்களுக்கு வேறு பெயர்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் ஆனந்த குமாரசிறி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து விளக்கமளித்த உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில்;

“நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் பெயர்கள் நாடாளுமன்ற ஹன்சாட்டில் பதியப்படுகின்றன. அந்த வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரும் ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதன் பின்னர், அவரின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றே பதியப்பட்டுள்ளது.

விடயம் அறியாதவர்கள் நாடாளுமன்ற ஹன்சாட்டை எடுத்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நிறை வேற்றிக் கொள்வதற்கான விவாதம், நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே மேற்படி சர்ச்சை எழுந்தது.

இதன் பின்னர், சபையில் மீண்டும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, ஹன்சாட்டிலுள்ள விடயத்தை, தான் தவறாக விளங்கிக் கொண்டதாகவும், அதனாலேயே நிதியமைச்சரின் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும், ரவி கருணாநாயக்கவின் பெயர் தொடர்பில், தான் தெரிவித்த கருத்துக் குறித்து மனம் வருந்துவதாகவும் கூறினார்.

ஆயினும், இவை எதற்கும் பதில் வழங்காமல் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்