தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து விட்டு, ஊரிலுள்ள பெரும்பான்மையானோர் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், இந்த வீடியோவில் உதுமாலெப்பை அச்சுறுத்தல் விடுக்கின்றார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனையில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இவ்வாறு வன்முறைக்கு தூபமிடும் வகையில் உதுமாலெப்பை பேசினார்.
அவர் அவ்வாறு பேசிய மேடையில், மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் பிரசன்னமாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேர்தல் தினத்தன்று வன்முறைக்கு தயாராகுமாறு உதுமாலெப்பை இவ்வாறு பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளமை குறித்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் தமது விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
தாம் விரும்பும் கட்சிக்குயொன்றுக்கு நபரொருவர் ஆதரவாளிப்பதற்கும், அந்தக் கட்சி சார்பான வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும், வாக்களிப்பு நிலையங்களில் முகவர்களாக செயல்படுவதற்கும் தாராளமாகவே, இந்த நாட்டில் உரிமை உள்ளது.
ஒரு ஊரில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் – குறித்த ஒரு கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில், மீதமுள்ள அத்தனைபேரும் பெரும்பான்மையானோர் விரும்பும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும், அந்தக் கட்சிக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று உதுமாலெப்பை கோருவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
ஒரு நாட்டில் எதிர்க்கட்சி வலிமை மிக்கதாக இருக்கும் போதுதான், அந்த நாட்டில் ஆளுங்கட்சி சிறப்பாக செயல்படும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
எவ்வாறாயினும், உதுமாலெப்பை தனது அரசியலை வன்முறை வழியிலேயே நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவர் மிக நீண்ட காலமாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து, மாகாண சபையில் அமைச்சர் பதவி வரை வகித்திருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் உதுமாலெப்பை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சுனையில், மிகவும் மோசமான வன்முறைகளையும் காடைத்தனங்களையும் புரிந்தே, தனது அரசியலைச் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரின் வன்முறை அரசியலால் பாதிக்கப்பட்டு, இதுவரை நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கும் ஏராளமான இளைஞர்கள் இப்போதும் முஸ்லிம் காங்கிரஸில் உள்ளனர்.
இந்த நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை அண்மையில் இணைந்து கொண்டார்.
அதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸிலும் தனது வன்முறை அரசியலை அவர் முன்னொடுக்கத் தொடங்கியுள்ளமைக்கு, அவர் பேசிய இந்த வீடியோ சாட்சியாக உள்ளது.
உதுமாலெப்பை பேசிய வீடியோ