கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

🕔 November 13, 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பாக செப்டம்பர் 27ஆம் திகதி காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் விசாரித்த நிலையில், அந்த மனுவை நிராகரிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை இல்லாதபோது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இரட்டை குடியுரிமை சான்றிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு வழங்கியதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்து அவர்கள் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்