கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

🕔 November 13, 2019

– வை.எல்.எஸ். ஹமீட் –

னாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய மீது சேறடிக்கும் வகையிலேயே, இந்த விவகாரத்தை எதிரணியினர் கையில் எடுத்துள்ளதாக, கோட்டா தரப்பினர் கூறியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பான சர்ச்சையை சட்டத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்கிறார் சட்டமுதுமாணி வை.எல்.எல். ஹமீட். அவர் இது தொடர்பில் எழுதியுள்ளதை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

மேல்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட, கோட்டாவுக்கெதிரான பிரஜாவுரிமை வழக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பானதல்ல. மாறாக, அவர் ‘இலங்கைப் பிரஜையா’ என்பது தொடர்பானதாகும்.

இங்கு இரு கேள்விகள் எழுந்தன?

ஒன்று: அமைச்சரவை நியமிக்கப்பட்டிராத அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, குறித்த விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இலங்கைப் பிரஜாவுரிமை (இரட்டை பிரஜாவுரிமை) வழங்கும் ஆவணத்தில் கையொப்பம் வைக்க அவருக்கு அதிகாரமிருக்கின்றதா என்பதாகும்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் அவ்வாறு கையொப்பம் வைக்கமுடியும் என்று கூறியபோதும், அது மேன்முறையீடு செய்யக்கூடியது.

இரண்டாவது: அவ்வாவணத்தில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. என்பதாகும். அதற்கு பதிலளித்த நீதிமன்றம், அது தொடர்பான விசாரணை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் இருப்பதால் அதைத்தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று கூறியது.

மறுபுறம், சில தொழில்நுட்ப (technical) குறைபாடுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதில் ஒன்று, இந்த வழக்கில் பிரதிவாதி இலங்கைப் பிரஜையில்லை என்ற முடிவுக்கு வந்தால், அவரது சார்பில் கட்டுப்பணம் செலுத்திய அவரது கட்சி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அந்தக்கட்சியையும் பிரதிவாதியாக குறிப்பிட்டிருக்க வேண்டும்; ஆனால் குறிப்பிடப்படவில்லை.

அடுத்து வழக்கு ஏன் இறுதி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டது? என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியது.

இவற்றின் அடிப்படையிலேயே அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கோட்டாவின் அமெரிக்க பிரஜா உரிமை தொடர்பாக நீதிமன்றில் கேள்வி எழுப்பப்படவில்லை. எனவே, இந்த விடயத்திற்கும் வழக்குக்கும் தொடர்பில்லை.

அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பாக தேர்தலின் பின்னர் உச்ச நீதிமன்றில் வழக்குத்தொடரலாம்.

கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அமெரிக்க பிரஜை என நிரூபிக்கப்பட்டால், அவர் ஜனாதிபதி பதவியை இழக்க நேரிடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்