தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ: பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

🕔 November 11, 2019

– ரி. தர்மேந்திரா, றிசாத் ஏ காதர் –

“காணாமல் ஆக்கப்படுகிற விடயம் இலங்கைக்கு புதிய விடயம் அல்ல. அதற்கு தோற்றுவாயாக, வழிகாட்டியாக இருந்தவர் ஆர். பிரேமதாஸ. பிரேமதாஸவை பற்றி நாடகம் எழுதிய பெரும் ஊடகவியலாளரும், பெருங்கலைஞருமான றிச்சர்ட் டி சொய்ஷா  படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிபோது இதனைக் கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டிலே பேரினவாதம், பெருமதவாதம் ஆகியவை தொடர்பான அச்சம் வளர்ந்து வருகின்றது. இந்த அச்சத்தை பயன்படுத்தித்தான் முஸ்லிம்களிடம் இருந்து – ஐக்கிய தேசிய கட்சி வாக்குகளை பெறுவதற்கு பெருமுயற்சி எடுக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கின்ற முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களை அச்சப்படுத்துவதன் மூலமே வாக்குகளை எடுக்கலாம் என்று நம்புகின்றனர். சாதித்திருப்பதாகவோ, ஒப்பந்தம் செய்திருப்பதாகவோ அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்த்து தருவதாகவோ சொல்லி இவர்களால் முஸ்லிம் மக்களிடம் வாக்கு கேட்க முடியாது. முஸ்லிம் மக்கள் அவற்றை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அவர்களின் கால் நூற்றாண்டு கால வரலாறு, முஸ்லிம் மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய புதிய கருத்துகளை கண்டு பிடிக்கின்றார்கள். ஏற்கனவே பயந்திருக்கின்ற முஸ்லிம் சமூகத்தை மேலும் அச்சப்பட செய்கின்றனர். 

ஆனால் பேரினவாதம், பெருமதம் ஆகியவற்றை கண்டு முஸ்லிம்கள் அஞ்சுவது போல, முஸ்லிம்களின் தீவிரவாதம் தொடர்பாக பெரும்பான்மை இனம் மற்றும் மதம் ஆகியவற்றை சேர்ந்த மக்கள் அச்சப்படுகின்ற சூழ்நிலையில்தான் நாங்கள் வாழ்கின்றோம்.

எங்களை அடிக்கின்றார்கள், எங்களை அடிக்கின்றார்கள் என்று நாங்கள் எப்பொழுதும் பிரச்சாரத்தை உலகத்துக்கு செய்து கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் எங்களை அறியாமலே எங்களுக்குள் தீவிரவாதம் – இஸ்லாமிய இயக்கம் என்கிற அடிப்படையில் வளர்ந்திருக்கின்றது.

இவற்றை எல்லாம் அவதானித்தவர்களாகவே மிக சிறுபான்மை இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள் இத்தேர்தலில்  நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. வளர்ந்து வருகின்ற மேற்சொன்ன பாரிய மாற்றங்களுக்குள் அவர்களை இலங்கையர்கள் என்று அடையாளம் காட்டி கொண்டு அரசியல் ரீதியாக செயற்படுவது குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இஸ்லாம் ஆயிரம் வருடங்களாக இலங்கையில் வாழ்கின்றது, வளர்ந்திருக்கின்றது. முஸ்லிம்கள் என்பதற்காக முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருடங்களாக பிரச்சினைகள் வரவில்லை. இஸ்லாம், மதத்துக்கோ, குரானுக்கோ, ஹதீஸுக்கோ பிரச்சினை வரவே இல்லை. ஆதி காலத்தில் இருந்து சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் எதிர்த்து இருந்தால் இந்தளவுக்கு இந்நாட்டில் இஸ்லாம் வளர்ந்திருக்கவே முடியாது. இந்தளவுக்கு முஸ்லிம்கள் பரவலாக வளர்ந்திருக்கவும் முடியாது.

அண்மை காலமாக எதிர்ப்பு வருகின்றது என்றால், நமது அரசியல் அண்மை காலமாக பிழைத்து விட்டது என்பதுதான் அர்த்தம்.  அரசியல் ரீதியான கோபம் அவர்களுக்கு இருக்கின்றது. முஸ்லிம் தலைவர்கள் செய்கின்ற அரசியலில் சிங்கள மக்களுக்கு இருக்கின்ற கோபம்தான் இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான கோபமாக வந்திருக்கின்றது.

அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டு மக்கள் எல்லோரையும் அச்சப்படுத்தி இருக்கின்றது. ராணுவமே யாழ்பாணத்தில் இருந்து வெளியேறு என்று சொன்னவர்கள் தமிழர்கள். ஆனால் ராணுவம் வடக்கை விட்டு வெளியேற கூடாது என்று அனந்தி சசிதரன் அறிக்கை விடுகிற அளவுக்கு நிலைமை மாறியது.

முஸ்லிம் மக்களுக்கு இரண்டு விதமான பயம்.  ஆனால்சிங்களவர்களுக்கு ஒரேயொரு பயம்தான் உள்ளது. அது முஸ்லிம் தீவிரவாதிகள் இனியும் தாக்க கூடும் என்பதுதான்.

ஆகவே பாதுகாப்பை முன்னிறுத்திய அரசியல் வேலைத் திட்டத்தை செய்ய வேண்டும் என்பதுதான் நாங்கள் கோதாபயவை ஆதரிக்க எடுத்த தீர்மானத்தின் பிரதான நோக்கம் ஆகும். அது மாத்திரம் அல்ல இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையானவர்கள் .யாரை விரும்புகின்றார்களோ அவர்களோடு நிற்க வேண்டிய அரசியல் அவசியம் தற்காலத்தில்  முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

இலங்கையில் இனத்துவ ரீதியான அரசியலே கோலோச்சுகின்றது. அதற்கு ஏற்ற வகையில் எமது அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஆகவேதான் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, அரசியல் ரீதியாக சிங்கள மக்களுக்கு ஏற்பட கூடிய கோபத்தை இல்லாமல் செய்கின்ற உபாயமாகவே பெருந்தலைவர் அஷ்ரப் நுஆவை உருவாக்கினார். இங்கு மிக பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களின் அரசாங்கத்தை ‘நாங்களே தெரிவு செய்தோம்’, ‘சிங்கள மக்களுக்குள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை நாங்களே தீர்மானித்தோம்’ என்கிற மாதிரியான பொய் பெருமை பேசுகின்ற அரசியலில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெற வேண்டும். அப்பொழுதுதான் முஸ்லிம்களுக்கு விடுதலை கிடைக்கும். 
அப்படியான ஒரு ஜனாதிபதிதான் வர போகின்றார். அப்படியான ஒரு காலம்தான் 2020 இல் பிறப்பிக்கின்றது. அந்த ஜனாதிபதியோடு சேர்ந்து நாங்கள் இலங்கையர்களாக, இலங்கை முஸ்லிம்களாக வேலை செய்கின்ற வேலை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. அப்பொழுதுதான் முஸ்லிம்களுடைய பாதையில் பாதுகாப்பு இருக்கும்.

பழைமைவாதங்களை பேசி கொண்டு முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழிப்பதில் நாங்கள் பங்காளிகளாக இருக்க முடியாது என்கிற அடிப்படையிலேயே, எமது தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது. ‘கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ உயரதிகாரியாக இருந்தவர், அவருக்கு பின்னால் பேரினவாதம் நிற்கின்றது, ஆகவே அச்சப்பட வேண்டி உள்ளது’ என்பது போன்ற பிரசாரங்களில் அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இலங்கையின் வரலாறு நெடுகிலும் நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்துதான் வருகின்றது.

ஜே.ஆர். ஜயவர்த்தனா என்ன செய்தார்? தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ராஜினாமா கடிதங்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார். அவர் என்ன ராணுவ உயரதிகாரியாக இருந்தவரா?

பிரேமதாஸவின் காலத்திலே மிக பெரும் ஊடகவியலாளரும், பெருங்கலைஞருமான றிச்சர்ட் டி சொய்ஷா காணாமல் ஆக்கப்பட்டார். ‘மெயா கவுத? மொக்கத கரனே?’ என்று பிரேமதாஸவை பற்றி றிச்சர்ட் டி சொய்ஷா எழுதிய நாடகம் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று சஜித் பிறேமதாஸ அவருடைய அப்பாவின் ஆட்சியை அச்சொட்டாக அப்படியே கொண்டு வர போவதாக சொல்கின்றார். றிச்சர்ட் டி சொய்ஷா போன்று காணாமல் ஆக்கப்படுகின்ற சூழ்நிலை வர மாட்டாது என்று ஏன் கேள்வி எழுப்ப முடியாது? 

இலங்கை அரசுக்கு உட்பட்ட சட்டம், ஒழுங்கு ஆகியவற்றுக்கு சமாந்தரமான புறம்பான தனிப்பட்ட சட்டம், ஒழுங்கு பிரேமதாஸவால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர் ஒரு புலனாய்வு பிரிவை வைத்திருந்தார். அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் யோசப் பொறுப்பாக இருந்தார். அவர் முக்கிய நபர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்கின்ற வேலையை செய்து கொடுத்தார். முக்கியமான அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டு, பிரேமதாஸவுக்கு ஆபத்தானவர்களாக இருக்க கூடியவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்படுகிற விடயம் புதிய விடயம் அல்ல. இலங்கை அரசியலில் நீண்ட நெடிய காலமாக இருந்து வருகின்ற விடயம். அதற்கு தோற்றுவாயாக, வழிகாட்டியாக இருந்தவர் பிரேமதாஸ. அந்த பிரேமதாஸவின் மகன் அந்த பிரேமதாஸவின் ஆட்சியை அப்படியே கொண்டு வரப் போவதாக சொல்கின்றபோது, இதெல்லாம் நிகழ மாட்டாது என்று எப்படி நம்புவது?

‘கொள கொட்டியா’ அல்லது ‘பச்சை புலி’ என்கிற தனி ஆயுத அமைப்பை பிரேமதாஸ வைத்திருந்தார். கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 203, 204 ஆம் இலக்க அறைகளில் அந்த சட்ட விரோத ஆயுத குழுவின் தலைவர்கள் இயங்கினர். அந்த ‘கொள கொட்டியா’ அமைப்புதான் ஜே.ஆரை அச்சப்படுத்தியது. அந்த சட்ட விரோத அமைப்புதான் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

சஜித் பிரேமதாஸ இப்படி ஒன்றை செய்ய மாட்டார் என்று நாம் எப்படி நம்புவது? அதை கண்டு அச்சப்பட தேவை இல்லையா? எங்கே முஸ்லிம் தலைவர்கள்? வரலாற்றை பின்னோக்கி பார்த்து படிப்பினைகளை பெற வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வழிகாட்டிகளாக முஸ்லிம் சமூகத்துக்கு இருக்க முடியும். எனவே எமது பேரன், பேர்த்திகளை பலி கொடுக்கிற அரசியலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய சமாதான கூட்டமைப்பு நிச்சயமாக தயாராக இல்லை” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி, பிரதித் தலைவர் நஸார் ஹாஜி மற்றும் தேசிய அமைப்பாளர் இர்பான் முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்