நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்…

🕔 November 9, 2019

ந்தியாவின் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு இன்று சனிக்கிழமை வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்’ எனும் தலைப்பில் கவிதையொன்றினை எழுதியுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள அந்தக் கவிதையை ‘புதிது’ வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

மனுஷ்ய புத்திரன் – ஓர் இஸ்லாமியர் என்பதும், அவரின் இயற்பெயர் அப்துல் ஹமீட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் ஒரு அன்னியனின்
கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மெளனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்

ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்

ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை
இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்
பிரார்த்தனையின் அமைதியை
கபர்ஸ்தான்களின் அமைதியை
ஒரு தரப்பான நீதியின் அமைதியை

பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு செய்தியைக் காண: பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்