மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றும், தண்ணீர் பவுசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாயமாகிப் போயிருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவை பிரதேச செயலகத்துக்குத் திரும்பியுள்ளன.
RF – 0590 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரமும், RY – 1011 எனும் இலக்கத்தையுடைய தண்ணீர் பவுசருமே இவ்வாறு மாயமாகியிருந்தன.
எவ்வாறாயினும், இந்த உழவு இயந்திரமும் தண்ணீர் பவுசரும் கடந்த சில மாதங்களாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
ஆயினும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்குத் தெரியாமல், பிரதேச செயலகத்தின் கணக்காளர் தனது தற்றுணிவின் பேரில் மேற்படி உழவு இயந்திரத்தினையும் தண்ணீர் பவுசரையும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வழங்கியிருந்ததாக, தகவல்கள் கசிந்துள்ளன.
எவ்வாறாயினும் பிரதேச சபையின் வசம் இருந்தபோது, இந்த உழவு இயந்திரம் மற்றும் தண்ணீர் பவுசர் ஆகியவை, தனியார் ஒப்பந்தகாரர்கள் சிலர் மேற்கொண்ட வீதி நிர்மாண வேலைகளில் பயன்படுத்தப்பட்டதாக, அம்பாறை கச்சேரிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, தற்போது பிரதேச செயலகத்துக்கு அவை திடீரெனத் திரும்பியுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான மேற்படி உழவு இயந்திரத்தையும் பவுசரையும், பிரதேச செயலாளரின் அனுமதியின்றி, வேறு ஒரு நிறுவனத்தின் பாவனைக்காக வழங்க முடியுமா?
பிரதேச செயலகத்தின் உழவு இயந்திரத்தினையும் பவுசரையும் வேறு நிறுவனமொன்றுக்கு வழங்க, அங்குள்ள கணக்காளருக்கு அதிகாரம் உள்ளதா?
இந்த விடயம் தொடர்பில் இன்னும் பல கேள்விகளும் தகவல்களும் உள்ளன. அவரை விரைவில் வெளிவரும்; காத்திருங்கள்.