ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது?
– மப்றூக் –
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களுக்காக ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 574 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், அதே காலப் பகுதியில் சஜித் பிரேமதாஸவின் விளம்பரங்களுக்காக 372 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, அனுர குமார திஸாநாயக்கவின் விளம்பரங்களுக்காக குறித்த காலப்பகுதியில் 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களுக்காக அச்சு ஊடகங்களுக்கு 42 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடகங்களுக்கு 456 மில்லியன் ரூபாவும், கள ரீதியான பிரசாங்களுக்கு 76 மில்லியன் ரூபாவும் மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளை சஜித் பிரேமதாஸ – அச்சு ஊடகங்களுக்காக 68 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடகங்களுக்கு 219 மில்லியன் ரூபாவும், கள ரீதியான பிரசாரங்களுக்கு 85 மில்லியன் ரூபாவும் குறித்த காலத்தில் செலவிட்டுள்ளார்.
மேற்படி இரண்டு பிரதான வேட்பாளர்களும் சுமார் 15 நாட்களில் இவ்வாறான பெரும் தொகைப் பணத்தினை தமது விளம்பரங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், இந்த நிதிகளை எங்கிருந்து பெற்றுக் கொண்டனர் என்கிற கேள்வியினையும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் எழுப்பியுள்ளது.
இலங்கையில் பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லை எ்ன்பது குறிப்பிடத்தக்கது.