மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார்.
திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார்.
உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான நாப்கின்கள் வாங்க முடியாத பெண்களுக்கு, அவற்றினை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்த வாக்குறுதி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு, அது குறித்த வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பித்துள்ளன.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்குவேன் என்று, சஜித் பிரேமதாஸ கூறியதை வைத்து, அவரை, Pad Man (பேட் மேன்) என்று, எதிரணியினர் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
பெருமையுடன் சூடிக் கொள்வேன்: சஜித் பதில்
எவ்வாறாயினும், இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சஜித் பிரேமதாஸ, ‘பேட் மேன் என்கிற லேபிளை பெருமையுடன் சூடிக் கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் பாடசாலை செல்லும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளில் அரைவாசிக்கும் அதிகமானோர், தமது மாதவிடாய் காலத்தில் பாடசாலை செல்லாமல் விடுவதாக யுனிசெப் தெரிவிக்கிறது. இந்த நிலையானது பெண்களின் கல்வியைப் பாதிக்கிறது. எங்கள் அரசாங்கம் சுகாதார உற்பத்திப் பொருட்களிளுக்கான வரிகளை 63 வீதமாகக் குறைத்தது. ஆனாலும், ஆயிரக்கணக்கான பெண்கள் சங்கடப்பட்டுக்கொண்டு, ஒவ்வொரு மாதமும் தம்மை ஆபத்தில் ஆழ்த்திக்கொள்கின்றனர்.
இது பற்றி உரையாடுவதற்கு நான் வெட்கப்படமாட்டேன். பெண்களை வலுவூட்டுதல் தொடர்பில் நாம் தீவிரமாக இருப்போமானால், அதனைத் தொடங்குவதற்கு இது ஓர் அடிப்படையான இடமாகும். நிலையானதும், செலவு குறைந்ததுமான மாற்று வழிகள் கண்டறியப்படும் வரை, சுகாதார உற்பத்திப் பொருட்களை இலவசமாக வழங்கும் எனது வாக்குறுதி தொடர்பில் நான் உறுதியாக நிற்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.
சமூகவியலாளர் கருத்து
சஜித் பிரேமதாஸவின் இந்த அறிவிப்பு தொடர்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியும், சமூகவியல் துறையின் முன்னாள் தலைவருமான கலாநிதி ரமீஸ் அபூபக்கர் உடன் பிபிசி தமிழ் பேசியது.
“இலங்கையில் இதற்கு முன்னர் யாரும் முன்வைக்காத ஒரு தேர்தல் வாக்குறுதியாகவும், புதியதொரு விடயமாகவும் இதனைப் பார்க்க முடிகிறது” என்றார் அவர்.
“இலங்கை மக்கள் தொகையில் பெண்களின் தெகை 53 வீதமாகும். இவர்களில் 30 வீதமானோர்தான் மாதவிடாய் காலத்தில் நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். 70 வீதமானனோர் நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் துணிகளைத்தான் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துகின்றனர்”.
“எனவே, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை இலவசமாக வழங்கும்போது, அதனை இதுவரையில் பயன்படுத்தாத பெண்கள் பயன் பெறுவதோடு, அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்”.
ஆயினும் கடன் சுமை கொண்ட நமது நாட்டில், இவ்வாறான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குரிய நிதியை எங்கிருந்து பெறப் போகிறார்கள் என்பதும், அதற்கான செலவினை எப்படி ஈடுசெய்வார்கள் என்பதும் முக்கியமான கேள்விகளாகும்” என்றும் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கூறினார்.
நன்றி: பிபிசி