முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி
– முன்ஸிப் –
இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறாத அக்கிரமங்களும் அநீதிகளும், தந்போதைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள நிலையில், அதே ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக, சில முஸ்லிம் தலைவர்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களில் எந்தவித சமூக அக்கறைகளும் கிடையாது என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ள நிலையில், தமது கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட போதே, நஸார் ஹாஜி இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“முஸ்லிம்களின் வீட்டில் அல்குர்ஆன் வைத்திருப்பதற்கும், மதரஸாக்களில் அரபு எழுத்துக்கள் காணப்படுவதற்கும் இந்த ஆட்சியிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டது.
அக்கரைப்பற்று அபுபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் பெயர்ப் பலகையில் அரபு எழுத்துக்கள் காணப்பட்டமையினால், அந்தப் பெயர்ப் பலகையை அகற்றுமாறு இந்த ஆட்சியில்தான் கூறப்பட்டது. இப்போது அரபு மொழி சேர்க்கப்படாத புதிய பெயர்ப் பலகையே அங்கு வைக்கப்பட்டுள்ளது.
டொக்டர் ஷாபி அநியாயமாக கைது செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் பாலமுனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கடும் கவலை தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில்தான்தான் டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார் என்பதையும், அதனை ஹக்கீம் ஆதரவளிக்கும் சஜீத் பிரேமதாஸ உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும், மக்கள் மறந்து விட மாட்டார்கள்.
முஸ்லிம்களின் இருப்புக்கே இந்த அரசாஙகத்தில் அச்சுறுத்தல் ஏற்படமை குறித்து மக்கள் இன்றும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அரசாங்கம்தான் அரச ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்கியது எனக் கூறி, அந்த விவரங்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு மேடையிலும் மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வாசித்துக் காட்டி வருகின்றமை வேதனையானதாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரிய மோசடிகள் நடந்ததாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிகளை எடுக்கப் போவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தினர், ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட இதுவரை தூக்கிப் போடவில்லை. அப்படியென்றால், மஹிந்த ஆட்சியில் நடைபெற்றதாக இவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளெல்லாம் பொய்யானது என்றுதானே அர்த்தமாகிறது.
அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே மத்திய வங்கியைக் கொள்ளையிட்டது. சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பிரதமர் ரணில் நியமித்து இந்த கொள்ளையை கச்சிதமாக முடித்தார். ஆனால், இப்போது இந்தக் கொள்ளைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல் – பிரதமர் ரணில் கள்ள மௌனம் காப்பதும், இந்த அரசாங்கத்துக்கு ஒத்தூதும் முஸ்லிம் தலைவர்கள் அந்த திருட்டு பற்றி பேசாமல் இருப்பதும் கேவலமானதாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசாங்கத்தில் பல நூற்றுக் கணக்கான வன்முறைகளும் அக்கிரமங்களும் நடைபெற்றமை பற்றிப் பேசாமல்; ‘கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து’ என்று, தேர்தல் பிரசார மேடைகளில் முஸ்லிம் தலைவர்கள் சிலர் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் செய்த அக்கிரமங்களை விடவும் பெரிதாக, வேறு யார் செய்து விடப் போகிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷ ஒழுக்கமான, எதிலும் துப்புரவையும் நேர்த்தியையும் விரும்புகின்ற ஒரு தலைவர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்தபோது – கொழும்பு நகரத்தை அவர் அழகுபடுத்திய விதமே, அவற்றுக்கு சாட்சியாகும்.
எனவே, அவரின் தலைமைத்துத்தில் நிச்சயமாக நமது நாடு செழிப்புறும் என்கிற நம்பிக்கை உள்ளது. மேலும், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள அவரால்தான், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நல்லபிப்பிராயங்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும் என்றும் நாம் நம்புகிறோம்.
மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும், அவருக்கு தமது திரட்சியான ஆதரவை முஸ்லிம்கள் வழங்கியிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதனால், மஹிந்த ராஜபக்ஷவிடம் தார்மீக ரீதியாக எந்த உதவியையும் உரிமையுடன் எதிர்பார்க்கும் தகுதியை முஸ்லிம் சமூகம் இழந்து நின்றது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே, கோட்டாபய ராஷபக்ஷ போட்டியிடும் இந்தத் தேர்தலிலாவது முஸ்லிம் மக்கள் தமது திரட்சியான ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் அவரின் அரசாங்கத்தில் நலன்களையும் உதவிகளையம் பெற்றுக் கொள்ளும் தார்மீக உரிமையை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ளும் நிலைவரத்தை உருவாக்கிக் கொள்தல் வேண்டும்” என்றார்.