முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

🕔 November 1, 2019

– மப்றூக் –

ரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை பயணித்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிப்பதற்கு இவர்கள் மூவரும் தனித்தனியாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வாழைச்சேனையில் நடைபெறும் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக றிசாட் பதியுதீனும், அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ரஊப் ஹக்கீமும், தனது சொந்த ஊர் அக்கரைப்பற்றுக்குச் செல்வதற்காக அதாஉல்லாவும் இந்த விமானத்தில் பயணித்திருந்தனர்.

இந்தப் பயணத்தின் போது, அரசியல் வைரிகளான மு.கா. தலைவர் ஹக்கீமும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவும் கைகுலுக்கிக் கொண்டமை பலரையும் கவர்ந்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், எப்பொழுதும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் எதிர் எதிர் திசைகளில் இவர்கள் பயணித்தாலும் ஒரு பயணத்தின் மூலம் இவர்களைச் சேர்த்து வைத்ததன் மூலம், தனது வலிமையை ‘காலம்’ இன்னுமொரு முறையும் நிரூபித்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்