13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

🕔 November 1, 2019

– முன்ஸிப் –

பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு முன்வைத்திருந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் பொதுஜன பெரமுன ஏற்றுக்கொண்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, பிரதித் தலைவர் நஸார் ஹாஜி, செயற்குழு செயலாளர் அலி சப்ரி, மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப் பிரதிகளில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் பொதுஜன பெரமுன செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைள் சமூகம் சார்ந்தவை என்றும், கட்சி மற்றும் தனிப்பட்ட நலன் சார்ந்த கோரிக்கைகள் எவையும் அவற்றில் உள்ளடங்கவில்லை என்றும், அந்தக் சட்சியின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஏறாவூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சென்றுள்ளமையினால், இன்றையை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்