நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

🕔 October 24, 2019

– மப்றூக், படம்: பாறுக் ஷிஹான் –

நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவரிடம்தான் இந்த நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே, தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

நாட்டைக் காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

அட்டப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியில், நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டொக்டர் உதுமாலெப்பை, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் டொக்டர் ஸியா, கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி றூபி, சட்டத்தரணி றிபாஸ், சட்டத்தரணி சபறுல்லா மற்றும் சட்டத்தரணி றிம்சான் உள்ளிட்ட பலர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அங்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;

“வெளிநாட்டு சதிக்கு உட்பட்டு 2005ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்களின் வாக்குகளை ரணிலும் ஹக்கீமும் கிடைக்காமல் ஆக்கினர்.

ஆனாலும் 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த வெற்றி பெற்றார்.

இருந்த போதும் ‘முஸ்லிம்கள் நன்றிகெட்டவர்கள்’ என்கிற வடு அதனால் ஏற்பட்டது.

2015ஆம் ஆண்டு வெளிநாட்டு சதியினால்தான் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் தோற்றார்.

நரித்தனம் வெளிப்பட்டது

இந்த அரசாங்கம் அமைந்த பிறகு ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமாக, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தை மேற்கொண்டார்.

ஆனாலும், அந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டு 02, 03 வருடங்களுக்குள்ளேயே ரணிலின் நரித்தனம் வெளிப்பட்டு விட்டது.

மஹிந்த ராஜபக்ஷ அணியை திருடர்கள் என்று சிலர் விமர்சித்தார்கள். ஆனால், நாட்டின் திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க கொள்ளையிட்டார்.

முஸ்லிம்களை ரணில் அரசாங்கம் கறிவேப்பிலையாகவே பாவித்தது.

பயங்கரவாதி முத்திரை

மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அழுத்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, சில பௌத்த தேரர்கள் காரணமாக இருந்ததோடு, வெளிநாட்டு சதிகளும் பின்னணியில் இருந்தன.

அழுத்கம பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, பின்னாளில் மஹிந்த ராஜபக்ஷ பல வகைகளிலும் உதவினார்.

மஹிந்த காலத்தில் ஓரிரு பள்ளிகள் தாக்கப்பட்டன, முஸ்லிம்களுக்கு எதிராக சில சம்பவங்களே இடம்பெற்றன. ஆனால், ரணில் இந்த அரசாங்கத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்த போதுதான், திகண மற்றும் அம்பாறை கலவரங்கள் இடம்பெற்றன.

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தும் வேலைகளை ரணில் அரசாங்கம் செய்தது.

இனக் கலவரங்களை நாட்டில் ஏற்படுத்துவதன் மூலம், இந்த நாட்டின் வளங்களை ரணில் அரசாங்கத்தில் வெளிநாடுகள் சுருட்டிக் கொண்டன.

வாய் திறக்காத சஜித்

இந்த நாடும், நாட்டின் இறைமையும், பாதுகாப்பும்தான் முக்கியமானவையாகும். நாடு சிறப்பாக இருக்கும் போதுதான் எல்லா மத மக்களும் நிம்மதியாக வாழ முடியும்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இருக்குமானால், வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கியிருப்பார்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சஜித் பிரேமதாஸ வாய் திறக்கவில்லை.

நாட்டின் தலைவராக வருவதற்கு போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, நாட்டின் பாதுகாப்பை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது அவரின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

வெட்கக் கேடு

சிங்கள மக்களின் 75 வீதமான வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே கிடைக்கப் போகிறது.

அரச ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமாக சஜித் பிரேமதாஸதான் வெற்றி பெறுவார் என்பது போல் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. இது ஊடக விபச்சாரமாகும். இதனூடாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

எனவே, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறப் போகிறார் எனும் செய்தியை மக்கள் மத்தியில் ஊடகவியலாளர்கள்தான் கொண்டு செல்ல வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள தலைவர்கள், தீர்த்தக் கரையிலே வியாபாரம் செய்து விட்டுப் போகின்றவர்கள் போல், இந்த ஜனாதிபதி தேர்தலுக்காகவும் கிழக்கு மாகாணத்துக்கு வந்துள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சின் தேர்தல் பிரசார மேடையிலே் பேச வேண்டாம் என்று, முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூறியமையானது வெட்கக் கேடானதாகும்.

சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நல்லது என்று தலைவர் அஷ்ரப் கூறினார், நானும் கூறி வருகிறேன். ஆனால், ஹக்கீம் மற்றும் றிசாட் ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேவையில்லை என்கின்றனர்.

தேசிய காங்கிரஸின் நிலைப்பாடு

முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் எனும் நிலையிலிருந்து, முஸ்லிம்களை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது.

கோட்டாவைக் கூறி பயம் காட்டி வருகின்றார்கள். ஆனால், இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளராக இருந்து, இந்த நாட்டுக்கு அவர் பணியாற்றியுள்ளார்.

2005, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்கள் விட்ட தவறை, இம்முறையும் விட்டு விடாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

நாம் வாக்களித்தாலும் வாக்களிக்காமல் விட்டாலும் கோட்டா வெற்றி பெறுவார். எனவே, அந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக் கூடிய நிலையை ஏற்படுத்தக் கூடிய, புதிய அரசியமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே தேசிய காங்கிரஸின் நிபந்தனையாகும்.

கள்ளத்தனமான அரசியல் செய்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை சிலர் பயன்படுத்துகின்றனர்.

கண்ணியமான உலமா சபையானது, அரசியல் செய்யக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்