ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை

🕔 October 21, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று திங்கட்கிழமை கையளித்தனர்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை பகல், அரச அதிபரைச் சந்தித்த மேற்படி குழுவினர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் அஸ்லம் என்பவர் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளை நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் இதன்போது வழங்கினர்.

குறித்த உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் ஏற்கனவே தனக்குக் கிடைத்துள்ளதாக இதன்போது தெரிவித்த அரச அதிபர்; உரிய நபருக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

அரச அதிபரிடம் ஊடகவியலாளர்கள் மற்றும் விவசாய அமைப்பின் தலைவர்கள் தனித்தனியாக முறைப்பாட்டுக் கடிதங்களை இதன்போது கையளித்ததோடு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலும், லஞ்சம் பெற்றுவரும் நபர்கள் குறித்தும் தகவல்களை வழங்கினர்.

இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு, அங்கு கணக்காளராகப் பணியாற்றும் நபர், பொய்யான விவரங்களை வழங்கியமை தொடர்பில், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு எழுதப்பட்ட மேன்முறையீட்டின் பிரதியினையும் இதன்போது அரச அதிபரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கையளித்தார்.

தொடர்பான செய்தி: தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்