விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை

🕔 October 20, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்படி வீதி புனரமைப்பு மற்றும் நிர்மாண வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு பகிரங்க விலைமனுக் கோரல் ஒன்றின் மூலம் வழங்க வேண்டியிருந்தும், அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனன்பது நிரூபணமாகியுள்ளது.

இதனையடுத்தே, குறித்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் குறித்த ஊடகவியலாளர் கோரியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு மேற்படி ஊடகவியலாளர் வழங்கிய எழுத்து மூல கடிதத்தில்;

‘தங்கள் பிரதேச செயலகத்தினால் குறித்த வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் பொருட்டு, 17 செப்டம்பர் 2019ஆம் திகதி பகிரங்க விலைமனுக் கோரும் அறிவித்தல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு, தங்கள் நிறுவனத்தின் கணக்காளர் வழங்கிய ஆவணத்தை, தகவல் உத்தியோகத்தர் எனக்கு எழுத்து மூலம் அனுப்யிருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இவ்விடயம் தொடர்பில் நான் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு வழங்கிய பதிலில், மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விலைமனுக் கோரலுக்கான எழுத்து மூல அறிவித்தலை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை (தமிழ்), கல்முனை (முஸ்லிம்) பிரதேச செயலகங்களிலும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திலும் தாம் காட்சிப்படுத்தியதாகவும் எனக்கு அனுப்பப்பட்ட பதிலில் பிரதேச செயலக கணக்காளர் பதிவுசெய்திருந்தார்.

ஆயினும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் எனக்கு வழங்கிய தகவலின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, பொத்துவில் பிரதேச செயலகத்திடம் குறித்த விலைமனுக் கோரலுக்கான அறிவித்தலை காட்சிப்படுத்தியமை தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நான் பெற்றுக் கொண்டபோது, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் வழங்கிய தகவல் பொய்யானது என்கிற விடயம் அம்பலமானது.

குறித்த விலைமனுக் கோரலுக்கான அறிவித்தலை 17ஆம் திகதி காட்சிப்படுத்தியதாக கணக்காளர் எழுத்து மூலம் குறிப்பிட்டுள்ள போதும், செப்டம்பர் 20ஆம் திகதியன்றுதான் குறித்த அறிவித்தலின் பிரதியை பொத்துவில் பிரதேச செயலகத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ் கைளித்திருந்ததாக, பொத்துவில் பிரதேச செயலகத்தின் தகவல் அதிகாரி, எனக்கு வழங்கிய பதிலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, குறித்த விலைமனுக் கோரலுக்கிணங்க கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படும் விண்ணப்பங்களை செப்டம்பர் 30ஆம் திகதியன்று நீங்கள் திறந்துள்ளீர்கள்.

அப்படியாயின், பொத்துவில் பிரதேச செயலகம் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில், பகிரங்க விலைமனுக் கோரலுக்கான அறிவித்தலொன்றை ஆகக்குறைந்தது 14 நாட்கள் காட்சிப்படுத்த வேண்டும் எனும் விதியை நீங்கள் இந்த விடயத்தில் மீறியுள்ளீர்கள்.

எனவே, மேற்படி வேலைத்திட்டங்களுக்காக தாங்கள் மேற்கொண்ட பகிரங்க விலைமனுக் கோரல் நடவடிக்கையை ரத்துச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மேற்படி விலைமனுக் கோரல் அறிவித்தல் தொடர்பாக தமக்கு எந்தவித எழுத்து மூல பிரதிகளும் கிடைக்கவில்லை என, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரும், குறித்த ஊடகவியலாளருக்கு அறிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்