வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

🕔 October 18, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதிப் புனரமைப்பு வேலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த கமக்காரர் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற வங்கியாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீர் என்பவருக்கு, நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை வளலவாய் மேல் கண்டம் பிரிவு கமக்காரர் அமைப்பின் தலைவராக, ஓய்வுபெற்ற வங்கியாளர் சமீர் என்பவர் கடமையாற்றுகின்றார்.

வளலவாய் மேல் கண்டம் பிரிவிலுள்ள நாவற்குழி நெற்காணிப் பகுதியில் 36 லட்சம் ரூபாய் செலவில் வீதிப்புனரமைப்பு பணியொன்று இடம்பெறவுள்ளது. இதற்கான நிதியை தேசிய பொருளாதார கொள்கை விவகார அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், தமது பகுதியில் புனரமைக்கப்படவுள்ள வீதிக்கான அளவீட்டு விலைப்பட்டியலை (Billing of quantities) வழங்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திடம் கமக்காரர் அமைப்பின் தலைவர் சமீர், சில தினங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த வீதிப் புனரமைப்பு விடயத்தில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தி, தனக்கு வெளி நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மேற்படி கமக்காரர் அமைப்பின் தலைவர் சமீர் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னணி என்ன?

குறித்த வீதி புனரமைப்பு வேலையை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர், பகிரங்க விலைமனுக் கோரல் மூலம் ஒப்பந்தகாரருக்கு வழங்காமல், தமக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தகாரர் ஒவருவருக்கு வழங்கியுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் ஊடகங்களில் செய்திகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மேலும், பொதுமக்களும் இந்த மோசடி குறித்து சமூக ஊடகங்களில் எழுதத்தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே, குறித்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கைக்கு இடைஞ்சலாக கமக்காரர் அமைப்பின் தலைவர் சமீர் இருந்து விடுவாரோ எனும் பதட்டத்தில், இதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர், அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

தகவல் வழங்கியவர் யார்?

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக குறித்த வீதி புனரமைப்பின் அளவீட்டு விலைப்பட்டியலை (Billing of quantities) கோரி, தான் விண்ணப்பித்துள்ள விவரத்தை, அங்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவரே, வெளியாருக்கு வழங்கியதாக, கமக்காரர் அமைப்பின் தலைவரும் முன்னாள் வங்கியாளருமான சமீர் குற்றம்சாட்டுகிறார்.

“தான்தான் அவ்வாறு வெளியாருக்கு தகவல் வழங்கியதாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம், என்னிடமே பிரதேச செயலாளர் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார்” என்றும், சமீர் தெரிவிக்கின்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சில அதிகாரிகள், தமது மோசடியை மூடி மறைப்பதற்காக, பல்வேறு தவறான வழிகளைக் கையாண்டு வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்