சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயர் எழுதப்பட்ட பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்ட உழவு இயந்திரமொன்றினை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, தனது சொந்தக் காணிக்குள் மண் கொட்டியமை தொடர்பிலே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வழலவாய் கிழல் கண்டத்தில் அமைந்துள்ள நெற் காணியொன்றினுள் EP, RD – 2296 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரர் பதாகையை முகப்பில் காட்சிப்படுத்தியபடி மண் கொட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
குறித்த காணி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
இந்த நிலையில், குறித்த திகதியில், மேற்படி காணியில் எந்தவித நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடவில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வழலவாய் கிழல் கண்டத்தின் விவசாயக் குழுத் தலைவர் எம்.ஐ. சியாத் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு வழங்கியுள்ள பதிலில் இந்த விடயத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தகவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கிணங்க, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவரின் காணியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, குறித்த உழவு இயந்திரத்தின் மூலம் மண் கொட்டியமையானது, சட்டவிரோத நடவடிக்கை என்பது அம்பலமானது.
இதனையடுத்தே, அரச நிறுவனமொன்றின் பெயரை சட்ட விரோதமப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, குறித்த காணி உரிமையைாளர் மற்றும் உழவு இயந்திர உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்