மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை
– மப்றூக் –
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உப தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
உதுமாலெப்பை சார்பாக அவரின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை மட்டக்களப்பில் சந்தித்துப் பேசிய நிலையில், எதிர்வரும் புதன்கிழமை உதுமாலெப்பையை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டை ஹக்கீம் வழங்கியுள்ளார்.
உதுமாலெப்பையின் சொந்த சகோதரர் உட்பட பொத்துவில், இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, உதுமாலெப்பைக்கு நெருங்கிய நபர்கள் இணைந்து, ஹக்கீமுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் தரப்பில் இந்த திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை, எம்.எச்.எம். அஷ்ரப் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். அவர் ஆரம்பத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
பின்னர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், அந்தக் கட்சியின் அப்போதைய தவிசாளர் ஏ.எல்.எம். அதாஉல்லா முரண்பட்டுக் கொண்டு கட்சியிலிருந்து பிரிந்து சென்றபோது, உதுமாலெப்பையும் அதாஉல்லாவுடன் சென்றார்.
அதன் பின்னர், அதாஉல்லா ஆரம்பித்த தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளையும் வகித்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அந்தக் கட்சியிலிருந்து விலகிய உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்கும் உதுமாலெப்பை தரப்புக்குமிடையில், கடந்த காலங்களில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து கொள்ளும் பொருட்டு, அவரின் குடும்பத்தினரும் விசுவாசிகளும் ரஊப் ஹக்கீமை இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து கொண்டால், மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான அமைப்பாளரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். நஸீருடன் முரண்படாமல், அவருடன் இணங்கியே உதுமாலெப்பை தனது அரசியலை மேற்கொள்வார் என்கிற உத்தரவாதத்தை, இன்றைய தினம் ஹக்கீமிடம் உதுமாலெப்பை தரப்பினர் வழங்கியதாக, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நபர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.