அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, உழவு இயந்திரமொன்று தனியார் ஒருவரின் நெற்காணியில் மணல் கொட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஒருவருக்குச் சொந்தமான, வழலவாய் கிழல் கண்டத்திலுள்ள நெற் காணியில், கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று மணல் கொட்டும் வேலையில் உழவு இயந்திரமொன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
EP, RD – 2296 எனும் இலக்கத்தையுடைய மேற்படி உழவு இயந்திரத்தின் முகப்புப் பகுதியில் DIVISIONAL SECRETARIAT ADDALAICHENAI (பிரதேச செயலகம் – அட்டாளைச்சேனை) எனும் வாசகத்தினையுடைய பதாகையொன்று காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பில் அட்டாளைச்சேனை – 10ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.ஐ.எம். சியாத் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரங்களைக் கோரியிருந்தார்.
அதாவது, குறித்த காணியில் 2019 ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் ஏதாவது வேலைகளை செய்வதற்கு அனுமதி வழங்கினீர்களா? என்று, அவர் எழுத்து மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்து மூலம் பதிலளித்திருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தகவல் உத்தியோகத்தர்; அவ்வாறான எந்தவித வேலைகளையும் செய்வதற்கு, யாருக்கும் தாம் அன்றைய தினம் அனுமதி வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், குறித்த உழவு இயந்திரம் சட்ட விரோதமான முறையில் பிரதேச செயலகத்தின் பெயரை பயன்படுத்தியிருந்தமை அம்பலமானது.
எனவே, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கட்மையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் காணியில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி மண் கொண்டியமைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டிய தேவை எழுந்தது.
அத்தோடு, பிரதேச செயலகத்தின் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்திய உழவு இயந்திர உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், கண்டும் காணாமல் இருந்து வந்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடப்பிடத்டதக்கது.
எனவே, அரச நிறுவனமொன்றின் பெயரை , இவ்வாறு சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில், சமூக அக்கறையாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, குறித்த காணியில் மேற்படி உழவு இயந்திரம் மண் கொண்டியமைக்கு பின்னணியில், பாரிய மோசடிகள் இருக்கலாம் என, பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.