பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகப் பணியாற்றும் ஏ.எல்.எம். றிபாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரியிருந்த விவரங்களுக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
தாம் மேற்கொண்ட மோசடியொன்றினை மறைப்பதற்காகவே, இவர் இவ்வாறு பொய்யான தகவலை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது.
இதனையடுத்து, பொய்யான தகவலை தனக்கு வழங்கிய கணக்காளருக்கு எதிராக, குறித்த ஊடகவியலாளர் நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.
அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் வீதிப் புனரமப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பகிரங்க விலைமனுக்களைக் கோரியதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திடம் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, சில விவரங்களைக் கோரியிருந்தார்.
குறித்த ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கணக்காளர் றிபாஸ்; செப்டம்பர் 17ஆம் திகதி தாம் பகிரங்கமாக விலை மனுக் கோரியதாகவும், அதற்கான எழுத்து மூல அறிவித்தல்களை பொத்துவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கல்முனை (முஸ்லிம்), கல்முனை (தமிழ்) பிரதேச செயலகங்களிலும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திலும் காட்சிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் தெரிவித்த தகவலின் உண்மைத்தன்மையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, பொத்துவில் பிரதேச செயலாளருக்கு, குறித்த ஊடகவியலாளர் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.
அதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினரின் பகிரங்க விலை மனுக் கோரலுக்கான எழுத்து மூல அறிவித்தலை, பொத்துவில் பிரதேச செயலகத்தில் எப்போது காட்சிப்படுத்தினீர்கள் என, மேற்படி ஊடகவியலாளர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள பொத்துவில் பிரதேச செயகலத்தின் தகவல் அதிகாரி; செப்டம்பர் 20ஆம் திகதியே தமக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் குறித்த அறிவித்தல் கையளிக்கப்பட்டதாகவும், அதனை 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை, தாம் காட்சிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கணக்காளரே, குறிப்பிட்ட அறிவித்தல் பிரதியினை தங்களிடம் கையளித்ததாகவும் பொத்துவில் பிரதேச செயலக தகவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக, செப்டம்பர் 17ஆம் திகதியன்று விலைமனுக் கோரலுக்கான அறிவித்தலை காட்சிப்படுத்தியதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸ் குறிப்பிட்டிருந்தமை பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது.
மறுபுறமாக, தேசிய பெறுகைக் குழுவின் வழிகாட்டுதலுக்கிணங்க, பகிரங்க விலைமனுக் கோரலுக்கான எழுத்து மூல அறிவித்தலின் பிரதியொன்றினை 14 நாட்கள் காட்சிப்படுத்த வேண்டும் என்பது அவசியமாகும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரம் கோரிய ஒருவருக்கு – பொய்யான தகவலை வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸ் என்பவருக்கு எதிராக குறித்தசம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாத அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினரின் மேற்படி விலைமனுக் கோரலை ரத்துச் செய்வதற்கான கோரிக்கையினை விடுப்பதற்கும் தீர்மானித்துள்ளார்.
தொடர்பான செய்தி: விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்: அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம்