பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல்

🕔 October 10, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரிடமும் மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் பதவிகளில் உள்ளோரும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க நிதியில் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் போது, அவை தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தும் பதாதைகளை, ஒப்பந்த வேலைகளை மேற்கொள்வோர் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

இதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலைகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் பதாதைகளை செய்து தருவதாகக் கூறி, ஒப்பந்தகாரர்களிடமிருந்தும், ஒப்பந்த வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்தும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த – சில அதிகாரிகள் பணம் பெற்றதாகவும், ஆனால் அவ்வாறன விளம்பரப் பதாதைகள் பலருக்கு வழங்கப்படவில்லை எனவும் பணம் வழங்கியோர் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, ‘கம்பரலிய’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வேலைகள் பற்றிய விவரங்களைக் காட்சிப்படுத்தும் பதாகை ஒன்றினை, சந்தையில் 04 ஆயிரம் ரூபா செலவில் அமைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒப்பந்தகாரர்கள் மற்றும் ஒப்பந்த வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து, அவ்வாறான பதாதைகளை செய்து தருவதாகக் கூறி, ஒவ்வொரு பதாகைக்கும் 06 ஆயிரம் ரூபா வீதம் மேற்படி அதிகாரிகள் பணம் அறவிட்டுள்ளனர்.

ஆயினும், ஒரு வருடம் கடந்த நிலையில் கூட, குறித்த விளம்பரப் பதாதைகளை – உரிய தரப்பினரில் பலருக்கு, இந்த அதிகாரிகள் கையளிக்கவில்லை என்றும், பெற்றுக் கொண்ட பணத்தை அவர்கள் சுருட்டிக் கொண்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பல நூற்றுக்கணக்கான பதாதைகளைச் செய்து தருவதாகப் பணம் பெற்று, அவற்றுக்குரிய பணத்தை இவர்கள் ஏப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட வேலைகளின் போதும், இதன்பொருட்டு மேற்படி அதிகாரிகள் பணம் பெற்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்