விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்: அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் வீதி புனரமைப்பு வேலைகளுக்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பகிரங்க விலை மனுக் கோரல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதற்கான எழுத்து மூல அறிவித்தல்களை அட்டாளைச்சேனையிலுள்ள எந்தவொரு இடத்திலும் பிரதேச செயலகத்தினர் காட்சிப்படுத்தவில்லை எனும் விடயம் அம்பலமாகியுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம், இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அட்டாளைச்சேனை – 09ஆம் பிரிவில் வீதியொன்றினை நிர்மாணிப்பதற்காக 50 லட்சம் ரூபாவும், அதே பிரிவில் மற்றொரு வீதி புனரமப்புக்காக 36 லட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய பொருளாதார கொள்கைகள் மற்றும் புனர்வாழ்வு – புனரமைப்பு, வடக்கு அபிவித்தி, இளைஞர் விவகார அமைச்சு இந்த நிதியினை வழங்கிள்ளது.
இந்த நிலையில், குறித்த வேலைகளை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும் பொருட்டு பகிரங்க விலைமனுக் கோரல் இடம்பெறவில்லை என்றும், ரகசியமாக ஒப்பந்தகாரர் ஒருவருக்கு இந்த வேலைகளை வழங்குவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து ஊடகவியலாளர் ஒருவர் – இவ்விடயம் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரங்களைக் கோரியிருந்தார்.
அதற்கமைவாக இன்று புதன்கிழமை குறித்த ஊடகவியலாளருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக தகவல் அலுவலர் மற்றும் கணக்காளரின் கையொப்பங்களுடன் பதில் கடிதம் ஒன்றின் மூலம் கோரப்பட்ட தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்திலுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த மாதம் 17ஆம் திகதி, குறித்த விலைமனுக் கோரலுக்கான பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும், குறித்த விலை மனுக் கோரலுக்கான எழுத்து மூலமான அறிவித்தல் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை தமிழ், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகங்களிலும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திலும், பாலமுனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலும் காட்சிப்படுத்தப்பட்டதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மேற்படி எழுத்து மூல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அட்டாளைச்சேனையில் எந்தவொரு இடத்திலும், குறித்த அறிவித்தல் காட்சிப்படுத்தப்படவில்லை.
அந்த வகையில், அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ள வேலைத் திட்டங்களை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதற்கான விலைமனுக் கோரும் அறிவித்தலை, அட்டாளைச்சேனையில் எந்தவொரு இடத்திலும் காட்சிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கின்றமையானது கேலிக்குரியதாகும்.
இந்த நிலையில், இந்த விலைமனுக் கோரல் திட்டமிட்ட வகையில் பலரின் கண்களில் படாமல் மறைக்கப்பட்டுள்ளமை இதனூடாகப் புலப்படுவதாக, பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தொடர்பான செய்தி: ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு