கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி
🕔 October 19, 2015
– எம்.வை. அமீர் –
கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களையும், பிரதேச பாடசாலைகளின் அதிபர்களையும் தெளிவூட்டும் நிகழ்வு Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் தலைமையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது.
Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;
“கல்வியமைச்சு, பல்ககைலக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்றவற்றின் ஆலோசனைகளுடன் Knowledge Force நிறுவனம் இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள், பெற்றோர்கள், தொழில் புரிகின்றவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இந்தக் கண்காட்சி அமையவுள்ளது. குறிப்பாக, உயர் தரப் பரீட்சை எழுதிவிட்டு, தமது அடுத்த கட்டம் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கும் மாணவர்களுக்கு இந்தக் கண்காட்சியானது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்தக் கண்காட்சியில் கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், கல்வி, உயர்கல்வி, தொழில், தொழில் பயிற்சி தொடர்பான சேவையாளர்கள் என, ஏராளமானோர் பங்குகொண்டு, பயனாளிகளுக்கு உச்சபட்ட சேவையினை வழங்கவுள்ளனர்” என்றார்.
இதேவேளை, இக் கண்காட்சியைக் காண 12ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர் வரையிலானவர்களின் வருகையினை எதிர்பார்ப்பதாகவும் இஸ்ரத் இஸ்மாயில் இதன்போது கூறினார்.
மேற்படி நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன், சாய்ந்தமருது கோட்டத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. ரஹ்மான், கண்காட்சியின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் சிரந்த உள்ளிட்டோர் பங்குகொண்டிருந்தனர்.