அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர்
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பெரும் நிதியுதவி வழங்குவதாகவும், பிரதேச செயலக அதிகாரி ஒருவரின் சார்பில் அதிபர் ஒருவர் ‘புதிது’ செய்தியாசிரியரைச் சந்தித்துப் பேரம் பேசினார்.
நேற்று திங்கட்கிழமை புதிது செய்தியாசிரியரைச் சந்தித்த அந்த அதிபர்; “ஒப்பந்த வேலையொன்றுக்கான கொடுப்பனவு எனக்கு கிடைக்க வேண்டியுள்ளது. அதனைப் பெறுவதற்காகவே குறித்த பிரதேச செயலக அதிகாரியுடன் பேசி, ‘புதிது’ செய்தித்தளத்தில் அவரின் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வராமல் செய்வதாகச் சொல்லியுள்ளேன். அவ்வாறு செய்தால், எனக்கான கொடுப்பனவை உடனடியாக வழங்குவதற்கு அந்த அதிகாரி இணங்கியுள்ளார்” எனத் தெரிவித்த அந்த அதிபர், ‘புதிது’ செய்தித்தளத்துக்காக பெருந்தொகை பணம் வழங்குவதாகவும் கூறினார்.
ஆனாலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு, அவர்களின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு மேற்படி அதிபரும் துணை போகின்றமையினால், அவை குறித்த செய்திகளையும் ‘புதிது‘ விரைவில் வெளியிடும் என்று, அந்த அதிபரிடம் ‘புதிது‘ ஆசிரியர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் வீதி மற்றும் கட்டட நிர்மாண ஒப்பந்த வேலைகளில் பயன்படுத்தப்படும் கொங்றீட் தரத்தைப் பரீட்சிப்பதற்காக, ஒப்பந்தகாரர்களிடம் மேற்படி அதிபர், இரட்டிப்புத் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தரச் சான்றிதழ் வழங்கி வருகின்றார். அதில் மிகுதியாகக் கிடைக்கும் அரைவாசிப் பணத்தை, பிரதேச செயலக அதிகாரிகளுடன் குறித்த அதிபர் பங்கிட்டுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளுக்கு, ஒப்பந்தகாரர்களிடமிருந்து கொமிஷசன் எனும் பெயரில் லஞ்சம் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளிலும் இந்த அதிபர் ஈபட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
மேற்படி அதிபர் கடமை நேரத்தில் பாடசாலையில் இருப்பதில்லை என்றும், தனது உறவினரின் பெயரில், தான் மேற்கொள்ளும் ஒப்பந்த வேலைகளை கவனிப்பதிலேயே பாடசாலை நேரத்தை இவர் செலவிடுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு