ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம்

🕔 October 5, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் ஒப்பந்த வேலையொன்றுக்காக லஞ்சம் பெற்றுக் கொண்டமையினையும், மற்றொரு ஒப்பந்த வேலைக்கு கொமிஷன் (லஞ்சம்) கோரியமையினையும் நிரூபிப்பதற்குத் தேவையான சான்று ஒன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலையொன்றினை ஏற்கனவே 08 லட்சம் ரூபாய் கொமிஷன் (லஞ்சம்) பெற்றுக் கொண்டு கொந்தராத்துக்காரர் ஒருவருக்கு தாங்கள் வழங்கி விட்டதாகவும், மற்றொரு வீதி நிர்மாண ஒப்பந்த வேலையினை வழங்க வேண்டுமென்றால், அந்த ஒப்பந்த வேலைக்கான நிதியில் 25 சதவீதத்தினை தங்களுக்கு கொமிஷனாக (லஞ்சம்) ஒப்பந்தகாரர் வழங்க வேண்டுமென்றும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் கோரியுள்ளார்.

‘கணக்கு வழக்குடன்’ தொடர்புபட்ட ஒருவரே, இவ்வாறு லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையிலான சான்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலையொன்றினை வழங்கும் பொருட்டு பகிரங்கமாக விலை மனுக்கோரி அறிவித்தல் விடுக்க வேண்டியிருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல், அந்த ஒப்பந்த வேலையினை, லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த ஒப்பந்த வேலைக்கு பகிரங்கமாக விலைமனுக் கோரப்படாமையினை அடுத்து, அது தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் ஒப்பந்தகாரர்கள் விசாரித்ததாகவும், ஆனால் அது குறித்த ஆவணங்கள் எவையும் தனக்கு கிடைக்கவில்லை என பிரதேச செயலாளர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக மோசமாக ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாகவும், அங்குள்ள முக்கிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்:

01) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு

02) ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்