ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி இடம்பெற்ற செய்திகள் வெளியானமையினை அடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது தொடர்பில் முழுமையான தகவல்களைக் கேட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம், ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் விண்ணப்பமொன்றினை கையளித்துள்ளார்.
வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையினை வழங்கும் பொருட்டு, பகிரங்கமாக விலை மனுக் கோர வேண்டிய போதிலும், அவ்வாறு செய்யாமல், தமக்கு வேண்டிய நபருக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் – ரகசியமாக விண்ணப்பங்களை வழங்கி, இந்த விடயத்தில் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், மேற்படி ஒப்பந்த வேலையை வழங்கும் பொருட்டு சில ஒப்பந்தகாரர்களிடம் லஞ்சம் கோரியதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, வேறு சில வேலைகளை வழங்கும் பொருட்டும், ஒப்பந்தகாரர்களிடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில அதிகாரிகள், லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியை நேரடியாகச் சந்தித்த ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்; மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் மேற்படி ஒப்பந்த வேலை தொடர்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விவரங்களை வழங்குமாறு எழுத்து மூலம் கோரும் விண்ணப்பமொன்றினை கையித்தார்.
குறித்த கோரிக்கைக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு