அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு

🕔 October 2, 2019

– அஹமட் –

வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையொன்றினை வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வேலைக்காக ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்யும் பொருட்டு பகிரங்கமாக விலை மனுக்கோரும் அறிவித்தலை விடுக்க வேண்டிய போதும், ரகசியமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு பெறப்பட்ட விலை மனுக்களைத் திறக்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்த வேலைக்காக விண்ணப்பிக்கக் காத்திருந்தவர்கள், இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது, குறித்த வேலைக்காக ஒப்பந்தகாரர்களிடமிருந்து விலை மனுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, தாம் எழுத்து மூலம் பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவ்வாறு எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

ஒப்பந்த வேலைகளை வழங்கும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில முக்கிய அதிகாரிகள், ஒப்பந்தகாரர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுவருவதாக தொடர்சியான புகார்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு லஞ்சம் பெறும் அதிகாரிகள் பற்றிய விவரங்களையும், அதனை நிரூபிக்கும் வகையிலான சான்றுகளையும் ‘புதிது’செய்தித்தளம் தேவையானபோது வெளிப்படுத்தத் தயாராகவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்