கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

🕔 September 30, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேற்படி மனுவில் உள்ளடங்களும் காரணங்கள் அரசியல் ரீதியாக முக்கியமானது என்பதினால், குறித்த மனுவை மூவரங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துவது சிறந்தது என, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எதிர்வரும் 02 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அத்துடன் குறித்த மனுவின் பிரதிவாதிகளான குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ – அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்ததாகக் கூறி இந்நாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையான குடியுரிமைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்த கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த மனுதாரர்கள், குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவை சட்டத்திற்கு முரணான விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதை தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும், குறித்த மனுவின் விசாரணை முடியும் வரையில் குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்