ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்
– நூறுல் ஹுதா உமர் –
ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
கடந்த 22ஆம் திகதி அக்கரைப்பற்றிலுள்ள கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக இடம்பெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் ஸ்திர தன்மையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய அவசியம் தொடர்பில் ஆராயப்பட்டது.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் ஆதரவாளர்கள் யாரும் ஐ.தே. கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை அவருடன் சேர்ந்து பயணிப்பதில்லை என்றும், ரணிலின் ‘வாகனத்தில்’ ஏற வேண்டிய தேவை அஷ்ரபின் ஆதரவாளர்களுக்கு இல்லை என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, கடந்த கால தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் முன்வைத்த பயங்கரவாதத்தை முடித்தல், வடக்கு கிழக்கை பிரித்தல் போன்ற கோரிக்கைகளைப் போன்று, இம்முறையும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திட்டங்களை முன்வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள தலைமைத்துவ சபைக்கு அதிகாரம் வழங்குவதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எல்லா இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய தீர்வை முன்னிறுத்தி இணக்கப்பாட்டுடன் பயணிக்க கூடியதாக, புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் யாப்பை விரிவாக ஆராய்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தலைமைத்துவத்துக்கு மீயுயர் சபை வழங்கியது.
முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துவந்த தலைவர் அஷ்ரப்யின் மரணத்தின் பின்னர் நாட்டினதும், மக்களினதும் நலனில் அக்கறை கொண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிடம் தே.காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வரலாறு நடைபெற்றது.
ஏற்கனவே எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்புடன் பேசி, ஆராய்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற தலைமைத்துவ ம் பணிக்கப்பட்டு நேற்றைய கூட்ட முடிவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டது.