முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடமையாற்றியிருந்தார்.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக தேசிய மக்கள் இயக்கம் அமைந்துள்ளது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி ஆய்வாளர் அஜித் கொலன்னே ஆகியோரின் தலைமையில் இந்த இயக்கம் உருவாகியுள்ளது.
சட்டவாதிக்கத்தை உறுதிப்படுத்தல், வீண் விரயம், ஊழல் ஆகியவற்றை இல்லாதொழித்தல் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய அரசியல் நடைமுறையை முழுமையாக இல்லாது செய்யும் வகையிலேயே மகேஷ் சேனாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதாக தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர்.
”இந்த இடத்தில் அரசியல் கிடையாது. இந்த இடத்தில் சுயாதீனமாக நாட்டை மாற்றும் நோக்குடன் ஒன்றிணைந்தோரே இருக்கின்றனர். இது எனது தீர்மானம் கிடையாது. இது அனைவரது தீர்மானமாகும்” என ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கூறியிருந்தார்.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த மகேஷ் சேனாநாயக்க முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஊடாக அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஒருவராக மாற்றம் பெற்றார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2010ஆம் ஆண்டு அவரை ராணுவத்திலிருந்து விலக்கியிருந்ததுடன், புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து மகேஷ் சேனாநாயக்க மீண்டும் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரபல தொழிலதிபரான ரொஹான் பல்லேவத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.