அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள்
– முன்ஸிப் –
அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் மே 15 ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச சபை கலைக்கப்பட்டது. இதேவேளை, இங்கு கடமையாற்றி வந்த செயலாளரும் இடமாற்றப்பட்டுள்ளதால், இந்தப் பிரதேச சபையின் பதில் செயலாளர் பதவியினை இங்கு பிரதம லிகிதராகக் கடமையாற்றிய எஸ்.எம். கலீல் ரகுமான் என்பவர் வகித்து வருகின்றார்.
நியாயப்படி, செயலாளரின் பதில் கடமையினை பொறுப்பேற்றுச் செய்வதற்கு, மேற்படி கலீல் ரகுமானை விடவும் தகுதியுடையவர் ஒருவர் இதே பிரதேச சபையில் இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும், செயலாளரின் பதில் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு மேற்படி கலீல் ரகுமான் என்பவருக்கு எப்படி வழங்கப்பட்டது, ஏன் வழங்கப்பட்டது என்பது கேள்வியாகவே உள்ளது என்று அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளர் கடமையினைப் பொறுப்பேற்றுள்ள மேற்படி கலீல் ரகுமான் என்பவர், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றார் என அறிய முடிகிறது.
இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திலிருந்துதான் இவர்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்தப் பொருட் கொள்வனவுகளின் போது, பல்வேறு வகையான மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதி உதவியாளராகக் கடமையாற்றுகின்ற ஏ.எம். இர்பான் என்பவர்தான், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பிரதேச சபைகள் சடத்தின் 291(1) ஆவது பிரிவின் பிரகாரம், மேற்படி நபர்கள் இருவரும், தற்போது பிரதேச சபையில் ஏற்றுள்ள பதவிகளை வகிப்பது சட்ட விரோதமான செயற்பாடாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
“பிரதேச சபையின் உறுப்பினர் அல்லது சேவையாளர் எவரும், பிரதேச சபையுடன் செய்யப்படும் அல்லது பிரதேச சபைக்காக நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒப்பந்தத்தில் அல்லது வேலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அக்கறை காட்டுதல் அல்லது நிதிசார் அக்கறையினைக் கொண்டிருத்தல் ஆகாது” என்று, 1987 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பிரதேச சபைகள் சடத்தின் 291(1) ஆவது பிரிவு கூறுகிறது.
ஆனால், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் தலைவராகவும், உப தலைவராகவும் பதவி வகிப்பவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிதி உதவியாளராகவும், பதில் செயலாளராகவும் இருந்து கொண்டு, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றுவதற்குக் காரணமாகவும், அந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கான நிதிச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
மேற்படி இருவரின் நடவடிக்கைகளும், சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பதே, அங்குள்ள ஊழியர்கள் பலரின் முறைப்பாடாகும்.
எனவே, பிரதேச சபைச் சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படும் மேற்படி நபர்கள் இருவர் தொடர்பிலும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வதோடு, அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் மேற்படி நபர்கள் வகிக்கும் பதவிகள், உண்மையில் சட்ட விரோதமானவை ஆயின், அவர்களை உடனடியாக அப்பதவிகளிலிருந்து நீக்குமாறும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களினூடாக, இது தொடர்பில் அக்கறையுடையோர் கோரிக்கையொன்றினை முன்வைக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, எதிர்வரும் நாட்களில் நாம் ஊடகங்களினூடாக பதிவு செய்யவுள்ளோம். குறித்த மோசடிகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்கள் சிலவும் நம்மிடம் உள்ளன.
குறிப்பு: இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் நியாயமான மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றினை வரவேற்கின்றோம்.