ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு

🕔 September 27, 2019

மாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனை பிணையில் விடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் (தடை செய்யப்படாத அமைப்பு) முன்னாள் தலைவரும்  தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம்  நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவித்த நிலையிலேயே அவர் இவ்வாறு நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று பயங்கரவாத தடுப்பு மற்றும்  புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டதாகவும், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்