அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்

🕔 September 25, 2019

– மப்றூக் –

ல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் இணைந்து, இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர்.

இதேவேளை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகத் தெரிவித்து, இன்றைய தினம் பணிப் பகிஷ்பிலும் ஈடுபட்டனர்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுத்தீன் தொடர்ச்சியாகத் தடுத்து வருவதாகவும், அந்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் என்பவரை பழிவாங்கும் வகையில், அவரின் பதவியை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வறிதாக்கியுள்ளதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றம்சாட்டினர்.

மேலும் பொத்துவில் வைத்தியசாலைக்கு கிடைத்த பல்வேறு வசதிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் பறித்தெடுத்துள்ளதாகவும், இல்லாமல் செய்திருப்பதாகவும், இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

மேலும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலத்தில் முறைப்படி கடந்த 12ஆம் திகதி விடுமுறை பெற்றிருந்த போதும், அவர் அறிவித்தலின்றி கடமைக்குச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவித்து, அவரின் பதவியை வறிதாக்குவதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் எழுத்து மூலம் அறிவித்தமையானது, மிக மோசமான பழி வாங்கல் என்றும் இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் விடுமுறையில் இருந்தமையின் காரணமாகவே, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் நிருவாக உத்தியோகத்தருக்கு முறையாக அறிவித்த பின்னர், தான் விடுமுறையைப் பெற்றுக் கொண்டதாக, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம். றிபாஸ் ஊடகங்களிடம் கூறினார்.

தனது தந்தை சுகயீனமுற்றிருந்தமை காரணமாக, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், 12ஆம் திகதியன்று குறித்த விடுமுறைய பெற்றுக் கொண்டதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளருடைய உத்தரவுக்கிணங்க, தொடர்ந்தும் தனது கடமையை மேற்கொள்வதாகவும், ஆனால், தனது பதவியை வறிதாக்கி வழங்கிய அறிவித்தலை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் இதுவரை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், தனது சம்பளத்தை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் இடைநிறுத்தியுள்ளதாகவும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இதன்போது தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.ஏ. ரஹீம் ஆகியோரும் இதன்போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்